சென்னையில் 3 ஏரிகள் புத்துயிர் பெறுகின்றன வெள்ளம் மற்றும் வறட்சியை எதிர்கொள்ள புதிய திட்டம்

சென்னை, ஏப்.13: சென்னையில் வெள்ளம் மற்றும் வறட்சியை எதிர்கொள்ள புதிய திட்டம் ஒன்று உருவாக்கப்பட்டு வருகிறது. அதன்படி, 3 ஏரிகள் புத்துயிர் பெறுகின்றன. சென்னை மாநகராட்சி நொளம்பூர், ராமந்தங்கல் மற்றும் சுப்பிரமணிய ஆகிய மூன்று நகர்ப்புற ஏரிகளை புனரமைக்க முடிவெடுத்துள்ளது. காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் வகையில் ”நீல-பச்சை உள்கட்டமைப்பு” அணுகுமுறையை அடிப்படையாகக் கொண்டு இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்படி, ஏரிகளின் கரைகளை வலுப்படுத்துவது, மண் அகற்றுதல், ஈர நிலங்கள் உருவாக்குவது மற்றும் உயிரியல் வடிகட்டல் மண்டலங்கள் அமைப்பது ஆகியவை இந்த திட்டத்தில் இடம்பெறுகின்றன. இதன் மூலம் ஏரியில் கலக்கும் நீரை இயற்கையாகவே சுத்திகரித்து நீர்த்தரத்தை மேம்படுத்த இயலும்.

இதுகுறித்து, சென்னை மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், ”இந்த திட்டத்தின் கீழ் நடைபாதைகள், கூடாரங்கள், அமர்விடங்கள் மற்றும் பார்வை மேடைகள் போன்ற பொதுமக்களுக்கான வசதிகளும் ஏற்படுத்தப்படும். ஏரி புனரமைப்பால் நிலத்தடி நீர் மட்டம் உயரும், அருகிலுள்ள குடியிருப்பு பகுதிகளில் வெள்ள அபாயம் குறையும், நகர்ப்புற வெப்பமும் கட்டுப்படுத்தப்படும்” என்று தெரிவித்தார். நீல-பச்சை உள்கட்டமைப்பு அணுகுமுறை என்பது நீர் மேலாண்மையை சுற்றுச்சூழல் மற்றும் சமூக நலன்களோடு ஒருங்கிணைக்கும் ஒரு நவீன திட்டமிடல் முறை என்று அதிகாரிகள் விளக்கினர். இந்த திட்டம் விரைவில் தொடங்கும் என்றும், இந்த ஏரிகள் சென்னையில் இதர ஏரி புனரமைப்பு திட்டங்களுக்கு முன்மாதிரியாக விளங்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

நொளம்பூர் பகுதி வாசிகள் இந்த முடிவை வரவேற்றாலும், நீடித்த பராமரிப்பின் அவசியத்தை வலியுறுத்துகின்றனர். அப்பகுதிவாசியான ஆர்.குமார் கூறுகையில், ”இதற்கு முன்பும் அழகுபடுத்தல் பணிகள் நடந்தன, ஆனால் சரியான பராமரிப்பு இல்லாமல் அவை நிலைக்கவில்லை. மாநகராட்சி தொடர்ந்து மண் அகற்றல் பணிகளை மேற்கொண்டு, கழிவுநீர் கலப்பதை தடுத்தால் மட்டுமே இந்த திட்டம் உண்மையில் இப்பகுதியை மாற்றும்” என்று தெரிவித்தார்.
நிலவியல் நிபுணர் சரவணன் கூறுகையில், ”சென்னையில் ஒன்றோடொன்று தொடர்புடைய ஏரிகள் மற்றும் ஈரநிலங்களின் வலையமைப்பு, மழைநீரை உள்வாங்கி நிலத்தடி நீரை நிரப்பும் இயற்கை தடுப்புகளாக செயல்பட்டன. ஆனால் வேகமான நகரமயமாக்கல், ஆக்கிரமிப்புகள் மற்றும் மாசுபாடு ஆகியவற்றால் பல தசாப்தங்களாக இவற்றின் திறன் மிகவும் குறைந்துவிட்டது” என்று விளக்கினார். தற்போது மழைக்காலத்தில் திரும்ப திரும்ப ஏற்படும் வெள்ளம் மற்றும் கோடைக்காலத்தில் குறையும் நிலத்தடி நீர் மட்டம் என இரட்டை சவால்களை சென்னை எதிர்கொண்டு வரும் நிலையில், இந்த ஏரி புனரமைப்பு திட்டம் நகரின் நீர் மேலாண்மைக்கு ஒரு முக்கியமான தீர்வாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: