மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர், புகைப்படம் சின்னம் பொருத்தும் பணிகள் தீவிரம்

சென்னை, ஏப்.17: சென்னையின் 16 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர், புகைப்படம் பொருத்தும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. சென்னையின் 16 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஏப்ரல் 23ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதையொட்டி, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டுக் கருவிகள் மற்றும் வாக்குப்பதிவை உறுதிப்படுத்தும் இயந்திரங்கள், கணினி குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு, சென்னையின் 16 சட்டமன்ற தொகுதிகளின் பாதுகாப்பு அறைக்கு அனுப்பும் பணி அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் நடைபெற்றது.

எந்த இயந்திரம் எந்த சட்டமன்ற தொகுதிக்கு என கணினி குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டதோ, அதன்படி அவற்றை வரிசைப்படுத்தி காவல்துறையின் பாதுகாப்போடு தேர்தல் நடத்தும் அலுவலர்களின் 16 பாதுகாப்பு அறைகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. இந்த அறை தேர்தல் நடத்தும் அலுவலரின் கட்டுப்பாட்டில் தான் இருக்கும். இறுதி வாக்காளர் பட்டியலில் சென்னையில் 4,079 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. இவற்றில் 835 வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது. இந்த பதற்றமான வாக்குச்சாவடி மையங்களில் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணிகளுக்கு சிஆர்பிஎப் காவலர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

இந்த சட்டமன்ற பொதுத் தேர்தலில் சென்னை மாவட்டத்தில் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு வாக்குப்பதிவு நாளன்று காலை முதல் மாலை வரை கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும். இந்நிலையில், சென்னை மாவட்டத்தில் வாக்குச்சாவடி மையங்களை தயார் செய்யும் பணி தொடங்கப்பட்டு, முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளில் 419 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். இதனால் வாக்குப்பதிவு மின்னணு இயந்திரங்கள் கூடுதலாக தேவைப்பட்டது. கூடுதல் இயந்திரங்களை கணினி மூலம் தேர்வு செய்யும் பணி நடைபெற்றது. அரசியல் கட்சி பிரதி நிதிகள் முன்னிலையில் தேர்தல் அதிகாரி குமரகுருபரன் ஒவ்வொரு தொகுதிக்கும் வாக்குப்பதிவு இயந்திரங்களை சுழற்சி முறையில் தேர்வு செய்தார்.

இந்நிலையில், சென்னை மாவட்டத்திற்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளரின் பெயர், சின்னம், வண்ண புகைப்படம் அச்சடிக்கப்பட்டு, அவற்றை வாக்குப்பதிவு இயந்திரங்களில் பொருத்தும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்தமுறை வேட்பாளரின் புகைப்படம், வாக்குப்பதிவு செய்யும் இயந்திரத்தில் ஒட்டப்படுவதால் யாருக்கு வாக்களிக்கிறோம் என்பதை எளிதாக உறுதி செய்ய முடியும். அதன்படி, ராயபுரம் சட்டமன்ற தொகுதிக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர், வண்ண புகைப்படம் மற்றும் சின்னம் உள்ளடங்கிய வாக்குச்சீட்டு பொருத்தும் பணி ராயபுரம், மேற்கு மாதா கோவில் தெரு, புனித பீட்டர் மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடைபெற்றது. இதனை மாவட்ட தேர்தல் அலுவலர் குமரகுருபரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். 10,443 இயந்திரங்கள்: சென்னையின் 16 சட்டமன்ற தொகுதிகளுக்கு ஏற்கனவே 4,889 வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பப்பட்டுள்ள நிலையல், கூடுதலாக 5,554 இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்து. அதன்படி, மொத்தம் 10,443 வாக்குப்பதிவு இயந்திரங்கள் இந்த தேர்தலில் பயன்படுத்தப்படுகிறது.

419 வேட்பாளர்கள்: சென்னை ஆர்.கே. நகரில் 38 வேட்பாளர்களும், பெரம்பூரில் 47 வேட்பாளர்களும், கொளத்தூரில் 35 வேட்பாளர்களும், வில்லிவாக்கத்தில் 28 வேட்பாளர்களும், திரு.வி.க. நகரில் 23 வேட்பாளர்களும், எழும்பூரில் 18 வேட்பாளர்களும், ராயபுரத்தில் 28 வேட்பாளர்களும், துறைமுகத்தில் 23 வேட்பாளர்களும், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணியில் 26 வேட்பாளர்களும், ஆயிரம் விளக்கு 18 வேட்பாளர்களும், அண்ணாநகரில் 24 வேட்பாளர்களும், விருகம்பாக்கத்தில் 24 வேட்பாளர்களும், சைதாப்பேட்டையில் 15 வேட்பாளர்களும், தியாகராயநகரில் 26 வேட்பாளர்களும், மயிலாப்பூரில் 19 வேட்பாளர்களும், வேளச்சேரியில் 27 வேட்பாளர்களும் என மொத்தம் 419 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

Related Stories: