கோடை விடுமுறையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சென்னை, ஏப்.17: வார இறுதி நாட்கள் மற்றும் கோடை விடுமுறை தொடங்கியுள்ளதை முன்னிட்டு, பொதுமக்களின் பயண தேவையை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் விரிவான சிறப்பு பேருந்து இயக்கத்தை அறிவித்துள்ளது. சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் நோக்கில் முக்கிய பேருந்து நிலையங்களிலிருந்து கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதன்படி சென்னையின் முக்கிய மையங்களாக உள்ள கிளாம்பாக்கம் பேருந்து நிலையம், கோயம்பேடு பேருந்து நிலையம் மற்றும் மாதவரம் பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து நாளை 295 பேருந்துகளும், ஏப்ரல் 18ம் தேதி 310 பேருந்துகளும் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் முக்கிய நகரங்களுக்கு இயக்கப்பட உள்ளன. கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து நாளையும், 18ம் தேதியும் தலா 55 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், மாதவரம் பேருந்து நிலையத்திலிருந்து தலா 20 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அரசு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

தேர்தலுக்காக 10,663 பேருந்துகள்
சட்டமன்ற தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு பொது மக்கள் சொந்த ஊர்களுக்கு சென்று வாக்களிக்கும் வகையில் 10,663 பேருந்துகள் இயக்கப்படும் என்று அரசு விரைவுப் போக்குவரத்து மேலாண் இயக்குநர் மோகன் தகவல் தெரிவித்துள்ளார். அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘‘2026-சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, வரும் 21ம் தேதி முதல் 23ம் தேதி வரை, சென்னையிலிருந்து பல்வேறு இடங்களுக்கு கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு சென்னையிலிருந்து தினசரி இயக்கக் கூடிய 2,092 பேருந்துகளுடன், 5,574 சிறப்புப் பேருந்துகள் என மூன்று நாட்களுக்கும் சேர்த்து ஒட்டு மொத்தமாக, 10,663 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது’’ என கூறப்பட்டுள்ளது.

Related Stories: