அடையாறில் வாகன சோதனை ரூ.245.41 கோடி மதிப்பு தங்க நகைகள் பறிமுதல்

வேளச்சேரி, ஏப்.17: அடையாறில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில், தனியார் நிறுவனத்திற்கு உரிய ஆவணங்கள் இன்றி வேனில் எடுத்து செல்லப்பட்ட ரூ.245.41 கோடி மதிப்புள்ள தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் வகையில், பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி வேளச்சேரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அடையாறு அருணாச்சலபுரம் அருகே தேர்தல் பறக்கும் படையினர் நேற்று காலை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது மாங்காடு சையத் சாதிக் நகரை சேர்ந்த இஸ்மாயில் (33) என்பவர் தனியார் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான வேனை ஓட்டி வந்தார். தேர்தல் பறக்கும் படையினர் அந்த வேனை நிறுத்தி சோதனை செய்தபோது, ரூ.245.41 கோடி மதிப்பிலான தங்க நகைகள் இருந்தது தெரியவந்தது. விசாரணையில், இந்த நகைகளை சவுகார்பேட்டையில் இருந்து பல்லாவரத்தில் உள்ள தனியார் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்திற்கு எடுத்து சென்றதும், இதற்காக தேர்தல் அலுவலரிடம் உரிய அனுமதி பெறவில்லை என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து அந்த தங்க நகைகளை பறிமுதல் செய்த அதிகாரிகள், நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் ஒப்படைத்தனர். ரூ.2 லட்சம் சிக்கியது: திருவிக நகர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பெரம்பூர் நரமுக விநாயகர் கோயில் அருகே நேற்று முன்தினம் தேர்தல் பறக்கும் படை அதிகாரி ரமேஷ் தலைமையிலான குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தபோது ரூ.2 லட்சம் சிக்கியது. இதுகுறித்து தேர்தல் பறக்கும் படையினர் விசாரித்ததில், சவுகார்பேட்டை பகுதியைச் சேர்ந்த சோனி ஜெயின் (28) என்பதும், மாதவரத்தில் ஏசிக்கு பயன்படுத்தும் காஸ் விற்பனை நிறுவனத்தில் இருந்து பணத்தை வீட்டிற்கு கொண்டு சென்றது தெரியவந்தது. இதையடுத்து, உரிய ஆவணமில்லாததால் ரூ.2 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து பெரம்பூர் தாசில்தார் அலுவலகத்தில் உள்ள கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

ரூ.14 லட்சம் கஞ்சா பறிமுதல்: சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு, உரிய ஆவணங்களின்றி பயணிகள் கொண்டு செல்லும் நகை, பணம், பரிசு பொருட்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து வருகின்றனர். மேலும், தடை செய்யப்பட்ட போதை பொருட்களையும் பறிமுதல் செய்து வருகின்றனர். அதன்படி, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு நேற்று வந்த சாலிமார் எக்ஸ்பிரஸ் ரயிலில் ரயில்வே பாதுகாப்பு படையினர் சோதனை மேற்கொண்டு, கேட்பாரற்று கிடந்த பார்சலை சோதனை செய்தபோது கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, ரயில்வே பாதுகாப்பு படையினர் ரூ.12 லட்சம் மதிப்பிலான 24 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதேபோல், கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் ரூ.2 லட்சம் மதிப்பிலான 4 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Related Stories: