* தமிழ்நாட்டின் முதுகை குத்த தன்னுடைய முதுகை வாடகைக்கு விட்டிருக்கிறார் பழனிசாமி எனவும் சாடல்
தர்மபுரி காரிமங்கலத்தில் நேற்று நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பேசியதாவது: பொதுவாக கோடு போட்டா ரோடு போடணும்னு சொல்லுவாங்க. ஆனால் நம்ம திராவிட மாடல் ஆட்சியில், இந்தியாவிற்கே வழிகாட்டக்கூடிய ரோட்டை போட்டுக் கொண்டிருக்கிறோம். இந்த பாதையில் முன்னோக்கி போகவேண்டும் என்று தான், ஒட்டுமொத்த இந்தியாவையே அழைத்தோம். இது பாஜகவிற்கு பிடிக்கவில்லை.
இந்தியா வளர்ந்து விட்டால் ஆர்எஸ்எஸ் உருவாக்க நினைக்கும் 200 ஆண்டு கால பிற்போக்கு சமூகத்தை உருவாக்க முடியாது. அந்த சமுதாயம் வந்தால் தான் மக்களை மயக்கி உழைப்பை சுரண்டி ஒரு சிலர் மட்டும் வளமாக வாழலாம். ஆனால் நமது திராவிட மாடல் ஆட்சியில் வளர்ச்சி என்பது எல்லோருக்குமானது. யாரோ ஒரு சிலர் மட்டும் வளர்ந்தால் அது பிசினஸ். எல்லோரும் வளரவேண்டும். எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும் என்று உழைப்பது தான் திராவிட மாடலின் பேக்டர். அதனால்தான் தமிழ்நாடு முழுக்க பரவலான வளர்ச்சியை கொண்டு போகிறோம்.
இந்த சூழ்நிலையில் தமிழ்நாட்டிற்கு எவ்வளவு பெரிய ஆபத்து வந்துள்ளது என்று உங்க எல்லோருக்கும் தெரியும். அதுதான் தொகுதி மறு சீரமைப்பு. மக்கள் தொகையை கட்டுப்படுத்தாமல் இருக்கிற சில மாநிலங்களுக்கு விகிதாசாரத்தில் அதிக இடங்கள் கிடைக்கப் போகிறது. இதனால் நாடாளுமன்றத்தில் நமது குரல் வலுவிழந்து போகும். நமது ஸ்பீக்கருக்கு பவர் இல்லாவிட்டால், டெல்லி தமிழ்நாட்டைப் பற்றி சிந்திக்குமா? நமக்கு எந்த திட்டமாவது கிடைக்குமா? தென்னிந்தியாவிலிருந்து பிரதமர் உருவாகவேண்டும் என்று நாம் எதிர்பார்க்கவே முடியாது.
சொந்த நாட்டுக்குள்ளேயே இரண்டாம் தர குடிமக்களாக மாற்றப்படக்கூடிய ஒரு கொடுமை வரும். இதை அனுமதிக்கலாமா? இந்த ஆபத்துதான் தொகுதி மறு சீரமைப்பு. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நாளை (இன்று) தமிழ்நாடு முழுக்க கருப்பு கொடி போராட்டத்தை நாம், நடத்துகிற போது, டெல்லியில் நமது எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் போராடிகிட்டு இருப்பாங்க. தேர்தல் நடந்துட்டு இருக்கும் நேரத்திலும் எல்லாரையும் அனுப்பி வைத்து விட்டோம். ஒரு எம்பி கூட இங்கே இருக்க கூடாதுன்னு சொல்லிவிட்டேன்.
தேர்தல் எல்லாம் அப்புறம்தான். இதுதான் நமக்கு முக்கியம். சுயமரியாதைக்காக நாம் குரல் எழுப்ப தவறி விட்டால், நமது குரலுக்கு எப்போதும் மதிப்பு இருக்காது. இந்த போராட்டத்தில் வெல்லும் வரை நமது உரிமை குரல் அடங்க கூடாது. டெல்லி அடங்கும் வரை நாம் அடிக்கணும். நாம் அடிக்கிற அடியில் திமிர் எடுத்த பாஜக அடங்கியே ஆகணும். பழனிசாமி அவர்களே இது தமிழ்நாட்டிற்கான போர். இதிலாவது கொஞ்சம் சுயமரியாதையோடு நடந்து கொள்ளுங்கள்.
அடிமையாகவும் துரோகியாகவும் இருக்கிறது பழனிசாமிக்கு மட்டும் பழக்கம் இல்லை அவருடன் வருகிறவர்களும் அப்படித்தான். அவர்களின் கூட்டணி துரோகிகளின் மொத்த கூடாரமாக உருவாகியிருக்கிறது. ஒருத்தர் முதுகையா குத்திக்கிட்டு, இப்போது தமிழ்நாட்டின் முதுகை குத்த தன்னுடைய முதுகை பாஜகவிற்கு வாடகைக்கு விட்டிருக்கிறார் பழனிசாமி. ஒன்றிய பாஜகவோ, தெற்கு மறுபடியும் தேயணும் என்று பிளான் போடுது.
தொகுதி சீரமைப்பு நடத்த போகிறோம் என்று சொல்லி ஒரு போரை தொடங்கி இருக்கிறார்கள். இந்த போரில் நம்ம தமிழ்நாட்டில் இருந்து ஓங்கி ஒலிக்கும் குரல், பாஜகவின் கொட்டத்தை அடக்க வேண்டும். ஒட்டுமொத்த இந்திய ஒன்றியத்தில் இருந்து தூக்கி எறியக்கூடிய வகையில் தமிழ்நாடு கொடுக்கும் பதிலடி, அவர்கள் ஹிஸ்டரியில் மறக்க முடியாத ஒன்றாக இருக்க வேண்டும். இந்த வகையில் சண்டை செய்ய நான் ரெடி.
* கடைசி 5 ஓவர்தான் முக்கியம்
‘‘டி20 மேட்ச் பாத்துட்டு இருக்கீங்க. டி20 மேட்ச் முதல் பதினைந்து ஓவர்ல என்னதான் சிறப்பாக ஆடினாலும் கடைசி ஐந்து ஓவர் நல்லா அடிச்சு ஆடுனா தான் 200 ரன்னை கடக்க முடியும். 230 கிராஸ் பண்ணும் அளவுக்கு அதிரடியாக ஆடணும். அடுத்த ஏழு நாளும் உழைக்கக்கூடிய உழைப்பு தான் 200 தொகுதிகளை தாண்டி வெற்றி பெற வைக்கும்’’ என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
