ஊட்டி: திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி தனியார் கல்லூரி பேராசிரியையை ஊட்டிக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்த உடற்கல்வி இயக்குனர் கைது செய்யப்பட்டார்.
கரூர் மாவட்டத்தை சேர்ந்தவர் குமரேசன் (33). இவர், கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் உடற்கல்வி இயக்குநராக பணியாற்றி வருகிறார். அதே கல்லூரியில் பணியாற்றும் சுமார் 30 வயது மதிக்கத்தக்க பேராசிரியைக்கும், குமரேசனுக்கும் அறிமுகம் ஏற்பட்டது.
நாளடைவில் இருவரும் காதலித்து வந்தனர். இருவரின் வீட்டுக்கு தெரியாமல் பல இடங்களுக்கும் ேஜாடியாக சென்று வந்தனர். இந்நிலையில், குமரேசன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பேராசிரியையை சுற்றுலாவுக்கு அழைத்துக்கொண்டு ஊட்டி வந்துள்ளார். பின்னர், அங்குள்ள தங்கும் விடுதியில் திருமண ஆசை வார்த்தை கூறி அந்த பெண்ணை பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. பின்னர், இருவரும் கோவை திரும்பி வேலையை பார்க்க தொடங்கினர்.
இதற்கிடையே, கரூரில் குமரேசனின் பெற்றோர் அவருக்கு திருமண ஏற்பாடுகளை செய்து வந்தனர். குமரேசனும் திருமணத்திற்கு உற்சாகமாக தயாராகி வந்தார். இதனை தாமதமாக அறிந்த பேராசிரியை இது குறித்து குமரேசனிடம் கேட்டு வாக்குவாதம் செய்தார். ஆனால், அவர் உரிய பதில் அளிக்காமல் அலட்சியம் செய்துள்ளார். பேராசிரியை நடத்திய கிடுக்கிப்பிடி கேள்வியால் நாம் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர். ஆனால், திருமணம் செய்து கொள்ள வாய்ப்பே இல்லை என்று திட்டவட்டமாக கூறினார்.
இதில் அதிர்ச்சியடைந்த பேராசிரியை இது குறித்து கோவை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுதொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர், இந்த வழக்கு ஊட்டி நகர அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து மாவட்ட எஸ்பி பிருந்தா உத்தரவின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சட்டம் மற்றும் எஸ்சி., எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து குமரேசனை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
