சென்னை: குடும்ப பிரச்னையில் அமைச்சர் மரிய வில்சன் மற்றும் சகோதரருக்கு இடையே சமரச பேச்சுவார்த்தையில் தீர்வு எட்டப்படாததால் மீண்டும் ஆகஸ்ட் 12ம் தேதி நேரில் ஆஜராகுமாறு அமைச்சர் மரியவில்சனுக்கு சென்னை உயர் நீதிமன்ற சமரச தீர்வு மையம் உத்தரவிட்டுள்ளது.நிதியமைச்சர் மரிய வில்சன், 2022ம் ஆண்டு புதுச்சேரி, எழில் நகரில் வசித்து வரும் அவரது சகோதரர் மரிய குலோத் வீட்டின் கதவை உடைத்து மரிய குலோத், அவரது மனைவி கெரோலின் ஆகியோரை தாக்கியதாக லாஸ்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர். புதுச்சேரி குற்றவியல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த வழக்கை ரத்து செய்ய கோரி அமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்த வழக்கில் சமரச தீர்வு மையத்தை அணுகி தீர்வு காணுமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
சென்னை சமரச தீர்வு மையத்தில் அமைச்சர் மரிய வில்சன் மற்றும் அவரது சகோதரர் தரப்பில் ஏற்கனவே 2 முறை சமரச பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் அதில் தீர்வு எட்டப்படவில்லை. எனவே, 3வது முறையாக நேற்று சமரச தீர்வு மைய நீதிபதி பாலசுப்பிரமணியம் முன்பு அமைச்சர் மரிய வில்சன், அவரது சகோதரர் மரிய குலோத் ஆகியோர் நேரில் ஆஜராகி சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.தொடர்ந்து ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் நேற்றும் தீர்வு எதுவும் எட்டப்படாததால் மீண்டும் வரும் ஆகஸ்ட் 12ம் தேதி அமைச்சர் மரிய வில்சன், அவரது சகோதரர் ஆகியோர் நேரில் ஆஜராக சமரச தீர்வு மையம் உத்தரவிட்டு பேச்சுவார்த்தையை ஒத்தி வைத்துள்ளது.
