சென்னை: தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் பிற மாநிலங்களில் நிலவி வரும் மழை காரணமாக வரத்து குறைந்ததால் கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகளின் வரத்து குறைந்துள்ளது. இதனால் விலை அதிகரித்து விற்பனை செய்யப்பட்டது. சென்னை கோயம்பேடு மொத்த சந்தையில் நேற்று காய்கறிகளின் விலை நிலவரம் புதிய உச்சத்தை எட்டியது. குறிப்பாக, கேரட், பீன்ஸ், பச்சை மிளகாய், இஞ்சி மற்றும் பூண்டு உள்ளிட்ட அத்தியாவசிய காய்கறிகளின் விலை பெருமளவு அதிகரித்து விற்பனை செய்யப்பட்டது.
சந்தையில் நிலவும் தற்போதைய விலை நிலவரப்படி, ஒரு கிலோ கேரட் (ஊட்டி) ரூ.10ல் இருந்து ரூ. 20க்கும், பீன்ஸ் ரூ.60ல் இருந்து ரூ.90க்கும், இஞ்சி ரூ.180ல் இருந்து ரூ.200க்கும், பூண்டு ரூ.230ல் இருந்து ரூ.250க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், பச்சை மிளகாய் ரூ.50ல் இருந்து ரூ.70க்கும், கத்தரிக்காய் (உஜாலா) ரூ.30ல் இருந்து ரூ.50க்கும், பீட்ரூட் (ஊட்டி) ரூ.20ல் இருந்து ரூ.40க்கும் விற்பனையாகிறது. வெங்காயம் மற்றும் தக்காளியை பொறுத்தவரை வெங்காயம் ரூ.20ல் இருந்து ரூ.40க்கும், தக்காளி தரத்திற்கு ஏற்ப ரூ.12 முதல் ரூ.30 வரையிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக, கடந்த சில நாட்களாக சந்தைக்கு வரும் காய்கறிகளின் வரத்து கணிசமாக குறைந்ததால், பெரும்பாலான காய்கறிகளின் விலை உயர்ந்து காணப்படுகிறது. வழக்கமாக நாள் ஒன்றுக்கு 10,000 டன் காய்கறிகள் வர வேண்டிய நிலையில், கடந்த இரண்டு நாட்களாக 7,000 டன் மட்டுமே வருவதால் இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். இதில் 3,000 டன் வரை குறைந்திருப்பதை வியாபாரிகள் சுட்டிக்காட்டினர். குறிப்பாக கேரட், பச்சை மிளகாய், பீன்ஸ், இஞ்சி ஆகிய காய்கறிகளின் வரத்து பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. மற்ற காய்கறிகளான அவரைக்காய் ரூ.60ல் இருந்து ரூ.80க்கும், பட்டாணி ரூ.130ல் இருந்து ரூ.150க்கும், சின்ன வெங்காயம் ரூ.60ல் இருந்து ரூ.80க்கும் விற்பனையாகிறது.
பொதுவான காய்கறிகள் கிலோவிற்கு ரூ.10 முதல் ரூ.20 வரை உயர்ந்துள்ள நிலையில், காய்கறி விலை உயர்வு சமையலறை பட்ஜெட்டில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. வரத்து சீராகும் வரை காய்கறிகளின் விலை இதே உயர்வில் நீடிக்க வாய்ப்புள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கோயம்பேடு மார்க்கெட் சிறு, குறு காய்கறி வியாபாரிகள் சங்க தலைவர் முத்துகுமார் கூறுகையில், கோயம்பேட்டிற்கு பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து காய்கறிகள் தினந்தோறும் வருகிறது. மழை காரணமாக காய்கறிகள் வரத்து குறைந்துள்ளதால் விலை அதிகரித்துள்ளது என்றார்.
