மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சொந்தமான ரூ.60 கோடி மதிப்பிலான கட்டளை சொத்து மோசடி தொடர்பாக 19 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு பாண்டியர்கள், விஜயநகர அரசர்கள், கர்நாடக மன்னர்கள், சிற்றரசர்கள் மற்றும் ஜமீன்தார்கள் பலர் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிலங்களை தானமாக வழங்கியும், கட்டளைகளை ஏற்படுத்தியும் வைத்துள்ளனர்.
இதன்படி, புதுக்கோட்டை ராஜகுமாரர் தட்சிணாமூர்த்தி துரைராஜா துரைராணி கட்டளை கடந்த 1930ல் சைதாபேட்டை சார்பதிவாளர் அலுவலகத்தில் பதியப்பட்டது. இதன்படியான உயில்சாசனத்தை புதுக்கோட்டை ராஜகுமார் துரைராஜாவின் மனைவி துரைராணி என்பவரால், மதுரை அழகர்கோவில் ரோட்டில் அஜ்மல்கான் ரோடு, சொக்கிகுளம் பகுதியில் ரூ.60 கோடி மதிப்பிலான அகோதவிலாஸ் பங்களா மற்றும் தோட்டம் ஆகிவற்றின் மூலம் கிடைக்கும் வருவாயை கொண்டு மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கும், திருவிழாவிற்கும் பல்வேறு தர்ம காரியங்களை மேற்கொள்ள வேண்டும். இதேபோல் கள்ளழகர் கோயிலுக்கும், அன்னதானம் உள்ளிட்ட பல்வேறு தர்மகாரியங்களும் மேற்ெகாள்ள வேண்டுமென அந்த உயிலில் கூறப்பட்டுள்ளது. இந்த ெசாத்தை வாடகையை தவிர வேறு எந்த வகையிலும் பயன்படுத்த கூடாது என்றும் அந்த உயிலில் கூறப்பட்டுள்ளது.
இவ்வாறு திருக்கோயில் கட்டளைக்கு எழுதிய நிலத்தை கடந்த 2016ல் ராமாயி ஆயியார் உள்பட 9 பேரின் பெயருக்கு மதுரை வடக்கு தாலுகா அலுவலகம் மூலம் தன்னிச்சையாகவும், சட்டவிரோதமாகவும் பட்டா மாறுதல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பான புகாரின் பேரில் அப்போதைய விஏஓ அரசன், தாசில்தார் அன்பழகன் உள்ளிட்டோர் மீது சஸ்பெண்ட் உள்ளிட்ட துறைரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதையடுத்து மதுரை வடக்கு தாசில்தாரின் பட்டா மாறுதல் உத்தரவை எதிர்த்து ஆர்டிஓவிடம் செய்யப்பட்ட மேல்முறையீட்டில், பட்டா மாற்றம் ரத்து செய்து கடந்த 2016ல் உத்தரவிடப்பட்டது. இதை எதிர்த்து ராமாயி உள்ளிட்டோர் டிஆர்ஓவிடம் மேல்முறையீடு செய்தனர். இதில், ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவாகி நிலுவையில் உள்ளது. இதேபோல் ஐகோர்ட் மதுரை கிளையில் தொடரப்பட்ட வழக்கிலும் பட்டா மாற்றம் செய்த உத்தரவிற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த சொத்து தொடர்பாக மதுரை ஆர்டிஓ விசாரணையில் உள்ளதை மறைத்தும், ஐகோர்ட் கிளை தடையை மறைத்தும் தூத்துக்குடி மாவட்டம், முறப்பநாடு சார் பதிவாளர் அலுவலகத்தில் உசிலம்பட்டியை சேர்ந்த இளையராஜா, திருவள்ளூர் ராமபுரத்தை சேர்ந்த அனிஷ் ஆகியோரது பெயரில் 2021ல் பவர் பதிவு செய்துள்ளனர். இந்த பவர் மூலம் திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை சார்பதிவாளர் அலுவலகத்தில் கவிதா, பிரகாஷ், காளிக்குமார் ஆகியோர் பெயரில் அடமான பத்திரம் பதிவு செய்தனர்.
இதுகுறித்து அறநிலையத்துறை சார்பில், மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு உயில் சாசனம் மூலம் எழுதி வைக்கப்பட்டுள்ள கட்டளை சொத்தை அபகரிக்கும் நோக்கில் செயல்பட்டுள்ள அனைவர் மீதும் குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கடந்த 2021ல் மதுரை போலீஸ் கமிஷனரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து இந்த முறைகேடு குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு தகவல்களும், ஆவணங்களும் வெளியாகின. இதேபோல் அறப்போர் இயக்கத்தின் சார்பிலும் முறைகேடு நடந்தது குறித்து புகார் மனுக்கள் அளிக்கப்பட்டது. பின்னர் அறநிலையத்துறை இணை ஆணையர் செல்லத்துரை தரப்பில் மீண்டும் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து மதுரை மாநகர் குற்றப்பிரிவு போலீசார், இந்த முறைகேடு தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதன்படி, புதுக்கோட்டை கறம்பக்குடியை சேர்ந்த ராமாயி ஆயியார், ஒரத்தநாடு செந்தமிழ்செல்வி, அம்மனிப்பட்டு பிரேமா, ராஜ்குமார், வாச்சுவாடி முத்துராணி, ராஜேந்திரன், குழந்தையா, புஷ்பராஜ், இலந்தைவாடி ஜோதி, புதுக்கோட்டை கீதா, மதுரை பீபீகுளம் முன்னாள் விஏஓ அரசன், முன்னாள் தாசில்தார் அன்பழகன், உசிலம்பட்டி இளையராஜா, திருவள்ளூர் ராமபுரம் அனிஷ், முறப்பநாடு அனந்தராமன், விளாங்குடி கவிதா (இளையராஜா மனைவி), ராமபுரம் பிரகாஷ், திண்டுக்கல் சிறுமலையை சேர்ந்த காளிகுமார், வடமதுரையை சேர்ந்த சார்பதிவாளர் பிரசாந்த் சந்தானகருப்பன் ஆகிய 19 பேர் மீது மோசடி மற்றும் கூட்டுச்சதி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பழநி கோயில் ரூ.100 கோடி நில மோசடி விவகாரம் விஸ்வரூபம் ஆகியுள்ள நிலையில், தற்போது மதுரையில் மீனாட்சி அம்மன் கோயில் கட்டளை சொத்தில் மோசடி நடந்த விவகாரத்தில் 19 பேர் மீது வழக்கு பதியப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
* பழநி கோயில் நில அசல் ஆவணங்கள் ஒப்படைப்பு: வாரிசுகளிடம் விசாரணை
பழநியில் ரூ.100 கோடி நிலமுறைகேடு வழக்கில், திண்டுக்கல் சிபிசிஐடி அலுவலகத்தில் நேற்று 2வது நாளாக பழநி சார்பதிவாளரிடம் விசாரணை நடத்தப்பட்டது. தொடர்ந்து, 1880ல் அந்த நிலத்தை தண்டபாணி மடத்திற்கு தானமாக கொடுத்த குப்புசாமி மணியக்காரர் குடும்பத்தின் வாரிசுத்தார்களான பழநி பாலசமுத்திரத்தை சேர்ந்த சுந்தரி, ஜெயலட்சுமி, விஷ்ணுசுதர்சன் ஆகியோர், நேற்று மாலை 6 மணிக்கு திண்டுக்கல் சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராகினர்.
அப்போது, நிலத்துக்கான அசல் ஆவணங்களை வழங்கினர். சிபிசிஐடி எஸ்பி சாஜிதா, டிஎஸ்பி அஜய்தங்கம் ஆகியோர் அவர்களிடம் சார் பதிவாளர் முன்னிலையில் ஒரு மணி நேரம் விசாரணை நடத்தி சாட்சியங்கள், ஆவணங்களை பதிவு செய்தனர். இதனிடையே வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரிய மனுக்கள் மீதான விசாரணையை ஐகோர்ட் மதுரை கிளை நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், ஆர்.சக்திவேல் ஆகியோர் நாளைக்கு தள்ளி வைத்தனர்.
