மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகாவிற்கு மற்ற மாநிலங்களின் அனுமதி பெற வேண்டும் என உச்சநீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிடப்படவில்லையா? நீர்வளத்துறை இணை அமைச்சருக்கு எடப்பாடி கண்டனம்

 

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: காவிரி நதிநீர் தமிழ்நாட்டில் 20 மாவட்டங்களை சேர்ந்த மக்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும், டெல்டா மாவட்டங்களின் விவசாயத்திற்கு உயிர்நாடியாகவும் விளங்குகிறது. பல சட்டப் போராட்டங்களுக்கு பிறகு, 16.2.2018 அன்று காவிரி நதிநீர் தொடர்பான இறுதி தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியது. அதிமுக எம்பிக்களின் தொடர் அழுத்தம் காரணமாக மத்திய அரசு, காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் நீர் முறைப்படுத்தும் குழு செயலாக்க திட்டத்தை 1.6.2018 அன்று மத்திய அரசிதழில் வெளியிட்டு, அதன்படி தமிழ்நாட்டிற்குரிய பங்கு நீர் பெறப்பட்டு வந்தது. இந்த ஆண்டு கர்நாடக அரசு காவிரியில் நமக்குரிய பங்கு நீரை உரிய காலத்தில் வழங்க தவறியதால் டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது பல மாவட்டங்களில் குடிநீருக்கே பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

* பன்மாநில நதிகள் தேசிய சொத்து. எந்த ஒரு மாநிலமும் தனி உரிமை கோர இயலாது என்று 2018ம் ஆண்டு உச்சநீதிமன்ற தீர்ப்பிலும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

* அனைத்து மாநிலங்களின் வாதங்களை முழுமையாக கேட்டறிந்த உச்ச நீதிமன்றம், தனது தீர்ப்பில், ஆற்றின் மேல்புறத்தில் அமைந்துள்ள எந்த ஒரு மாநிலமும், ஆற்றின் கீழ்ப்புறத்தில் உள்ள மாநிலங்களுக்கு திட்டமிடப்பட்டபடி நீர் விநியோகம் செய்யப்படுவதை பாதிக்கும் வகையிலான எந்த ஒரு நடவடிக்கையையும் மேற்கொள்ளக்கூடாது என தெரிவித்துள்ளது.

* மேகதாது அணை திட்டத்தை செயல்படுத்தக் கூடாது என்ற நிலைப்பாட்டை அதிமுக அரசு பிரதமருக்கு கடிதங்கள் மூலமாகவும், நேரடியாகவும் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டது. மத்திய நீர்வளத் துறை அமைச்சரிடமும் இதுகுறித்து வலியுறுத்தப்பட்டது.

இந்த சூழ்நிலையில், காவிரி நதிநீர் தொடர்பான வழக்கில் 2018ம் ஆண்டு உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், `காவிரி ஆற்றின் குறுக்கே எந்தவிதமான கட்டுமானத்தையும் கர்நாடக அரசு கட்டுவதற்கு தமிழகம், கேரளா, புதுச்சேரி ஆகிய மாநில அரசுகளிடம் ஒப்புதல் பெற வேண்டும்’ என்று எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை என்று மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சர் நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள பதில், தமிழக மக்களிடையே மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.இதுபோன்ற மிக முக்கியமான பிரச்சனைகள் குறித்து எழுப்பப்படும் கேள்விகளுக்கு பதில் அளிக்கும்போது, சம்பந்தப்பட்ட மாநில மக்களின் உணர்வுகளை மனதில்கொண்டு பதில் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: