ஆசிரியர் சங்கங்கள், ஆசிரியரல்லாத பணியாளர் சங்கத்தினருடன் அமைச்சர் கலந்துரையாடல்

 

சென்னை: தமிழக சட்டமன்றத்தில் அடுத்த வாரம் நிதிநிலை அறிக்கை வெளியிடப்படவுள்ள நிலையில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் தலைமையில் நேற்று சென்னை, கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நூலகக் கூட்டரங்கில் அனைத்து ஆசிரியர் சங்கங்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர் சங்கங்களின் பொறுப்பாளர்களுடன் அவர்களது கோரிக்கைகள் தொடர்பாக கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. பள்ளிக் கல்வித்துறை செயலாளர் சந்தர மோகன், பள்ளிக்கல்வி இயக்குநர் கண்ணப்பன், தொடக்கக் கல்வி இயக்குநர் நரேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அமைச்சர் ராஜ்மோகன் பேசியதாவது:பள்ளிக்கல்வித்துறையின் ஆணிவேராக இருப்பவர்கள் ஆசிரியர்கள். பேசி தீர்க்க முடியாத பிரச்னைகள் எதுவும் கிடையாது. இரு மாநிலங்களுக்கு இடையே போடக்கூடிய ஆறாக இருந்தாலும் வெவ்வேறு நாடுகளுக்கு இடையே ஓடக்கூடிய ஆறாக இருந்தாலும் இது போன்ற தீர்க்க முடியாத பிரச்னைகள் கூடப் பேசி தீர்த்து இருக்கிறார்கள். ஆசிரியர்கள் உங்களுடைய கோரிக்கைகளை என்னிடம் தெரிவிக்கலாம்.

வெளிப்படையான நிர்வாகத்தை வழங்குவதை லட்சியமாகக் கொண்டவர் முதல்வர். மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்களின் நலனை மட்டுமே இலக்காகக் கொண்டு பள்ளிக்கல்வித்துறை பயணித்துக்கொண்டு இருக்கிறது.என்னிடம் வரக்கூடிய மனுக்களை எல்லாம் முன்னுரிமை அடிப்படையில் பிரித்துக்கொடுக்க, எடுக்கப்படும் நடவடிக்கைகள் தொடர்பாக கண்காணிக்க செயலி ஒன்று உருவாக்கப்பட்டு வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

* தனியார் பள்ளிகளுக்கு விரைவாக அனுமதி; அமைச்சர் முன்னிலையில் விமர்சனம்

தவெக ஆட்சிப் பொறுப்புக்கு வந்தவுடன் நூற்றுக்கணக்கான தனியார் பள்ளிகளுக்கு அனுமதி வழங்கியது தவெக அரசு. அப்போதே பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்பு எழுந்தது. ஏற்கனவே அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து வரும் நிலையில், தனியார் பள்ளிகளுக்கு விரைவாக அனுமதி வழங்கி, தனியார் பள்ளிகளை ஊக்குவிப்பது பாதிப்பை ஏற்படுத்தும் என விமர்சிக்கப்பட்டது.

இந்நிலையில், நேற்று நடைபெற்ற கலந்துரையாடல் கூட்டத்தில் ஆசிரியர் சங்க நிர்வாகிகள் தனியார் பள்ளிகளுக்கு விரைவாக அனுமதி வழங்குவது தொடர்பான விமர்சனத்தை அமைச்சர் முன் வைத்தனர். குறிப்பாக அவர்கள் பேசுகையில், ஏற்கனவே பல்வேறு காரணங்களால் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து வரும் நிலையில், தொடர்ந்து தனியார் பள்ளிகளை ஊக்குவிப்பது அரசுப்பள்ளிகளை வலுவிழக்க வைத்து மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும் என்றனர்.

Related Stories: