மின்வெட்டுக்கு எதிராக தீவிர போராட்டம்; லிபியா அரசுக்கு புதிய நெருக்கடி

திரிபோலியில்: லிபியாவின் தலைநகர் திரிபோலியில் கடந்த சில வாரங்களாக தினமும் பல மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்படுவதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த மக்கள், தலைநகரின் பல்வேறு பகுதிகளில் சாலைகளை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நகரின் சாலைகளையும் அரசு கட்டிடங்களையும் பொதுமக்கள் முற்றுகையிட்டிருப்பதால், இந்தப் போராட்டம் பிரதமர் அப்துல் ஹமீத் டிபைபா தலைமையிலான அரசுக்கு புதிய அரசியல் மற்றும் நிர்வாக நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சனிக்கிழமை இரவு, திரிபோலியின் மேற்கு பகுதிகளான ஜன்சூர், கஜூரா மற்றும் சோக் அல்-ஜிமா ஆகிய இடங்களில் மின்வெட்டுக்கு எதிராக தொடங்கிய போராட்டம், தற்போது தலைநகரின் பல்வேறு பகுதிகளுக்கும் பரவியுள்ளது.

மேற்கு திரிபோலி மின் நிலையம் முன்பு ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டு, நீடித்த மின்வெட்டு, அரசின் நிர்வாகத் தோல்வி மற்றும் அடிப்படை சேவைகளை வழங்குவதில் ஏற்பட்டுள்ள அலட்சியம் ஆகியவற்றைக் கண்டித்து முழக்கமிட்டு வருகின்றனர்.

மின்வெட்டுக்கு எதிரான போராட்டமாகத் தொடங்கிய இந்த இயக்கம், தற்போது பிரதமர் அப்துல் ஹமீத் டிபைபா தலைமையிலான தேசிய ஒற்றுமை அரசாங்கத்திற்கு எதிரான அரசியல் போராட்டமாக மாறியுள்ளது. அரசு பதவி விலக வேண்டும் என்றும், மின்சாரப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

எண்ணெய் வளம் மிகுந்த நாடாக இருந்தாலும், பல ஆண்டுகளாக நீடித்து வரும் அரசியல் நிலையற்ற தன்மை, மோசமான உள்கட்டமைப்பு, மின்சாரத் துறையில் முதலீட்டுப் பற்றாக்குறை மற்றும் நிர்வாகச் சிக்கல்கள் ஆகிய காரணங்களால், லிபியாவில் மின் விநியோகம் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறது.

கோடைக்காலத்தில் மின்சாரத் தேவை அதிகரித்துள்ள நிலையில், பல மணி நேர மின்வெட்டு மக்களின் அதிருப்தியை மேலும் அதிகரித்துள்ளது. தற்போதைய போராட்டம், மின்சாரப் பிரச்சினையைத் தாண்டி, அரசின் செயல்பாடுகள் மீதான மக்களின் நம்பிக்கையின்மையை வெளிப்படுத்துவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

Related Stories: