கடமலைக்குண்டு கிராமத்தில் குடிநீர் தட்டுப்பாடு காரணமாக தூர்வாரப்படும் உறை கிணறுகள்

வருசநாடு : கடமலைக்குண்டு கிராமத்தில் குடிநீர் தட்டுப்பாடு காரணமாக, மூலவைகை ஆற்றில் உள்ள உறைகிணறுகளை தூர்வாரும் பணிகளை ஊராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.கடமலை – மயிலை ஒன்றியம் கடமலைக்குண்டு கிராமத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது.

இந்த கிராமத்தில் வசிக்கும் பொதுமக்களுக்கு, கரட்டுப்பட்டி மூல வைகை ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள 3 உறை கிணறுகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. வழக்கமாக மழைக்காலத்திற்கான நீர்வரத்து மார்ச் மாதம் வரை நீடிக்கும்.

இந்த ஆண்டு போதிய மழை பெய்யாத காரணத்தால், கடந்த ஜனவரி மாதமே மூல வைகை ஆறு முற்றிலுமாக வறண்டது. தற்போது கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில், வழக்கத்தை விட வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது.

எனவே மூல வைகை ஆற்றில் உள்ள உறை கிணறுகளில் நீர்மட்டம் அபாய கட்டத்திற்கும் கீழ் சென்றுள்ளது. இதனால் இப்பகுதியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகி இருக்கிறது.

இதையடுத்து ஒன்றிய ஆணையர் சீதாராமன் உத்தரவின் பேரில் கடந்த இரண்டு நாட்களாக கடமலைக்குண்டு மூல வைகை ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள உறை கிணறுகளை தூர்வாரும் பணிகளில் ஊராட்சி நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

இந்தப் பணிகளை கடமலைக்குண்டு மயிலாடும்பாறை ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்கள் சீதாராமன், பிரேம்குமார், மயிலாடும்பாறை ஊராட்சி ஒன்றிய மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சாந்தி, ஊராட்சி செயலர் சின்னச்சாமி ஆகியோர் நேரில் ஆய்வு செய்து வருகின்றனர்.

தூர்வாரும் பணிகள் முடிவடைந்தாலும் கோடை காலம் முடியும் வரை குடிநீர் தட்டுப்பாட்டைச் சமாளிப்பது சவாலாக இருக்கும் என தெரிகிறது. இதனால் பொதுமக்கள் குடிநீரைச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என, ஊராட்சி நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

Related Stories: