களக்காடு: நெல்லை மாவட்டம், நாங்குநேரி அருகே மூலைக்கரைப்பட்டியில் அரசு மேல்நிலைப்பள்ளியில் 1,500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்தப் பள்ளியில் நேற்று பிளஸ் 2 வகுப்பில் 2 மாணவர்கள் அருகருகே அமர்ந்து தேர்வு எழுதிக் கொண்டிருந்தனர். இருவருக்குமிடையே திடீரென தகராறு ஏற்பட்டது. ஆசிரியரும், சக மாணவர்களும் சமரசப்படுத்தினர்.
இடைவேளையின் போது, ஒரு மாணவர் குடிநீர் அருந்த சென்றபோது, அங்கு வந்த மற்றொரு மாணவருடன் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த அந்த மாணவர் அவரை கட்டையால் சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் தலையில் படுகாயம் அடைந்த மாணவர் மயங்கி விழுந்தார். இதையடுத்து ஆசிரியர்கள் அவரை மீட்டு மூலைக்கரைப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
இதுபற்றி மூலைக்கரைப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து தாக்கிய மாணவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே மாணவரை ஜாதி பெயரை கூறி கம்பியால் குத்தியதாகவும், குத்திய மாணவர் சுவர் ஏறி குதித்து தப்பியோடி விட்டதாகவும், அங்குள்ள 16 சிசிடிவி கேமராக்களையும் உடைத்து விட்டதாகவும் பெற்றோர் மற்றும் உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மூலைக்கரைப்பட்டி பள்ளியில் மாணவர்களிடையே ஏற்பட்ட மோதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
