* அரசு ஊழியர்கள் பணியில் இருக்கும் போது இறந்தால் மட்டுமே, குடும்பத்தினருக்கு கருணை அடிப்படையில் வேலை கிடைக்கும்.
* பொது நிகழ்வில் இறந்தால் அரசு வேலை வழங்க வழிவகை இல்லை.
* கருணை அடிப்படையிலான வேலைகளுக்கு உச்ச நீதிமன்றம் வகுத்த விதிகளை தமிழ்நாடு அரசு மீறி உள்ளது.
* இந்த நியமனங்கள், அரசியலமைப்பின் 14 மற்றும் 16வது பிரிவுகளின் கீழ் இந்த நாட்டின் குடிமகனுக்கு வழங்கப்படும் உத்தரவாதத்தை நேரடியாக மீறுகிறது.
* அரசின் கொள்கை முடிவு சட்டத்திற்கு எதிராக இருந்தால் அதில் நீதிமன்றம் தலையிடலாம்.
மதுரை: கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி பலியானவர்கள் குடும்பத்துக்கு அரசு வேலை வழங்கிய உத்தரவை ரத்து செய்து ஐகோர்ட் மதுரை கிளை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. மேலும், அரசு பஸ், சிவகாசி பட்டாசு விபத்தில் பலியானவர்கள் குடும்பத்துக்கும் அரசு வேலை தருவீர்களா என தமிழக அரசுக்கு நீதிபதிகள் சரமாரி கேள்வி எழுப்பி உள்ளனர். தவெக சார்பில் கரூரில் கடந்தாண்டு செப். 27ல் நடந்த பிரசார பொதுக் கூட்டத்தில், அக்கட்சியின் தலைவர் விஜய் கலந்து கொண்டார்.
அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். பின்னர் தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தவெக கூட்டணி சார்பில் புதிய ஆட்சி அமைந்தது. தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்றக் கொண்டார். இதையடுத்து, கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோரின் குடும்பத்திற்கு கருணைப்பணி அடிப்படையில் 31 பேருக்கு தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் பணி நியமனங்களை கடந்த 10ம் தேதி முதலமைச்சர் விஜய் வழங்கினார்.
இந்த பணி நியமனங்களை எதிர்த்து, நாம் தமிழர் கட்சியை சேர்ந்த தீரன் திருமுருகன், சீனி அகமது மற்றும் சந்தோஷ் ஆகியோர் ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்தனர். அதில், ‘‘கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் அரசு வேலைக்கான பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் தகுதியுள்ள பட்டதாரி இளைஞர்கள் டிஎன்பிஎஸ்சி மற்றும் வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம் முறையான போட்டித் தேர்வுகளை எதிர்கொண்டு, நியாயமான முறையில் அரசு வேலைக்காகக் காத்திருக்கின்றனர். ஆனால், விதிகளைப் பின்பற்றாமல் தன்னிச்சையாக அரசு வேலை வழங்குவது நேர்மையாகப் படிக்கும் மாணவர்களின் வாழ்வாதாரத்தையும், வேலைவாய்ப்பிற்கான உரிமையையும் பறிக்கும் செயலாகும்.
உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினர், சிபிஐ விசாரணையில் இருக்கும் இந்த வழக்கின் மிக முக்கிய சாட்சிகள் ஆவர். குற்றவாளிகளைக் கண்டறியும் விசாரணை தீவிரமாக நடந்து வரும் வேளையில், சாட்சிகளாக இருக்கும் இக்குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்குவது சாட்சிகளுக்கு நன்மைகளை வழங்கி, அவர்களின் வாக்குமூலங்களை மாற்றவோ அல்லது திசைதிருப்பவோ வழிவகுக்கும்.
இது நீதி நிர்வாகத்தில் தலையிடும் செயலாகும். தவெக தலைமையிலான தற்போதைய அரசு, தங்களின் கவனக்குறைவால் ஏற்பட்ட ஒரு துயரச் சம்பவத்திலிருந்து அரசியல் லாபம் பெறுவதற்காகவும், தங்களைத் தற்காத்துக் கொள்வதற்காகவும் இத்தகைய திட்டத்தைக் கையில் எடுத்துள்ளது. எனவே, கரூர் கூட்ட நெரிசலில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கியதை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தனர்.
இந்த மனுக்களை ஏற்கனவே விசாரித்த நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், ஆர்.சக்திவேல் ஆகியோர், ‘‘இந்த நியமனங்கள் அனைத்தும் தற்காலிகமானதே. முதல் மாதம் சம்பளம் பெறுவதற்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என்பதால், கருணைப்பணி நியமனங்கள் குறித்து டிஎன்பிஎஸ்சி தரப்பில் பதிலளிக்க வேண்டும்’’ என உத்தரவிட்டிருந்தனர்.இந்நிலையில், இந்த மனுக்கள் நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், ஆர்.சக்திவேல் ஆகியோர் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
டிஎன்பிஎஸ்சி இணைச்செயலாளர் தரப்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘‘2018ம் ஆண்டின் அரசாணையின்படி கருணை அடிப்படையில் நியமிக்கப்பட்ட நபர்களின் பணியை நிரந்தரப்படுத்துவதற்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் ஒப்புதல் பெற விலக்கு அளிக்கப்பட்டுள்ளது’’ என தெரிவிக்கப்பட்டிருந்தது.
அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண் ஆஜராகி, ‘‘காவல் துறை சரியாக கையாளாததால் கரூரில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. உயிரிழந்த 41 பேர் மீதும் எந்த தவறும் இல்லை. அவர்களின் குடும்பத்துக்கு அரசு வேலை வழங்கியது அரசின் கொள்கை முடிவு. அதில் நீதிமன்றம் தலையிட முடியாது. அரசியலமைப்பு சட்டத்துக்கு உட்பட்டு தான் அரசு வேலை வழங்கும் விவகாரத்தில் அரசு செயல்பட்டுள்ளது. கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 நபர்களில் 31 பேருக்கு அவர்களின் கல்வி தகுதியை பொறுத்து பல்வேறு துறைகளில் தற்காலிக வேலை வாய்ப்பு வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இது அரசின் கொள்கைரீதியான முடிவு. ஏற்கனவே, தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்ட 20 பேருக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்கப்பட்டுள்ளது. மதுரை லீலாவதி கொலை வழக்கில் அவரது மகளுக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்கப்பட்டுள்ளது. வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசு வேலை வழங்கும் விதிமுறைகள் நடைமுறையில் உள்ளது.
அரசு எடுத்த இந்த மறுவாழ்வு நடவடிக்கை சட்டத்திற்கு உட்பட்டதே. இது சிபிஐ விசாரணைக்கோ, நீதிமன்ற நடவடிக்கைகளுக்கோ, எந்த விதத்திலும் பாதிப்பை ஏற்படுத்தாது. விதிகளை பின்பற்றியே கருணை பணி வழங்கியிருப்பதால் ரத்து செய்ய வேண்டியதில்லை. அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே, இந்த மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும்’’ என்றார்.
மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் கிளீட்டஸ் ஆஜராகி, ‘‘அரசின் கொள்கை முடிவு என்பதை ஏற்க முடியாது. பல லட்சம் இளைஞர்கள் படித்து வேலைக்காக பல ஆண்டுகளாக காத்து கிடக்கின்றனர். இது உச்சநீதிமன்றம் வகுத்துள்ள விதிகளுக்கு முரணாக உள்ளது. எதிர்காலத்தில் தவறான முன்னுதாரணத்ைத ஏற்படுத்தும். எனவே, இந்த நியமனங்களை ரத்து செய்ய வேண்டும்’’ என்றார்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ‘‘இந்த வழக்கில் அரசு தரப்பு வாதம் ஏற்கத்தக்கது அல்ல.
கருணை அடிப்படையில் பணி வழங்கப்பட்டது என்றால், தினமும் சாலை விபத்தில் ஏராளமானவர்கள் உயிரிழக்கிறார்கள். அவர்களுக்கு இழப்பீடு மட்டுமே வழங்கப்படுகிறது. வேலையில்லாமல் ஏராளமானவர்கள் காத்து கிடக்கின்றனர். அது குறித்து டிஎன்பிஎஸ்சி விபரங்களைத் தரும் என எண்ணினோம். ஆனால், அரசாணை கருணைப்பணி அடிப்படையில் பணி நிரந்தரம் செய்ய அதன் ஒப்புதல் பெற விலக்களித்துள்ளது தெரியவந்தது.
கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்கிய விவகாரத்தில் அரசு தரப்பு பல்வேறு ஒப்பீடுகளை செய்துள்ளது. ராணுவ வீரர்கள் பணியின் போது இறந்தால் அவர்களது வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்குவதை சுட்டிக்காட்டுகிறது. அதுவும், இதுவும் ஒன்றாகாது. கருணை அடிப்படையிலான வேலைகளுக்கு உச்ச நீதிமன்றம் விதிகளை வகுத்துள்ளது. அந்த விதிகளையும் தமிழ்நாடு அரசு மீறி உள்ளது.
அரசு ஊழியர்கள் பணியில் இருக்கும் போது இறந்தால் மட்டுமே, குடும்பத்தினருக்கு கருணை அடிப்படையிலான வேலை வாய்ப்பு செல்லும். பொது நிகழ்வில் இறந்தால் அரசு வேலை வழங்க வழிவகை இல்லை. இதுபோன்று அரசு பஸ் விபத்து, சிவகாசி பட்டாசு வெடி விபத்தில் உயிரிழப்பவர்கள் மற்றும் மற்ற கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழப்பவர்களுக்கு அரசு வேலை வழங்க முடியுமா? அவர்களின் குடும்பத்தினர் அரசு வேலை கேட்டால் அரசு நிர்வாகம் பாதிக்கும். எனவே, இது தவறான முன்னுதாரணமாக ஆகி விடக்கூடாது. இதற்கு மாற்றாக அரசு நிவாரணம், இழப்பீடு, காப்பீடு போன்றவற்றை வழங்கலாம். அரசு கருணை அடிப்படையில் வேலை வழங்கும் போது சட்ட விதிகளை பின்பற்றியதாக இருக்க வேண்டும்.
அரசு ஊழியர் அல்லாதவர்கள் கருணை அடிப்படையில் அரசு வேலை கோர முடியாது. கருணை அடிப்படையில் வேலை பெற பலர் காத்திருக்கும் நிலையில் கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஏன் முன்னுரிமை வழங்கப்படுகிறது. இந்த நியமனங்கள், அரசியலமைப்பின் 14 மற்றும் 16வது பிரிவுகளின் கீழ் இந்த நாட்டின் குடிமகனுக்கு வழங்கப்படும் உத்தரவாதத்தை நேரடியாக மீறுவதாக நாங்கள் கருதுகிறோம்.
அரசின் கொள்கை முடிவு சட்டத்திற்கு எதிராக இருந்தால் அதில் நீதிமன்றம் தலையிடும். எனவே, 31 பேருக்கு வழங்கப்பட்ட பணி நியமனங்கள் செல்லாது என்பதால், அதற்கான தொடர்பான அரசாணை ரத்து செய்யப்படுகிறது. இந்த வழக்கின் தொடக்கத்திலேயே கூறியபடி, முதல் மாத ஊதியம் வழங்குவதற்கு முன்பே, வழக்கு விசாரித்து முடிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.
* ‘அரசுப்பணியில் சாதாரண வேலை என்று எதுவும் கிடையாது’
நீதிபதிகள் கூறுகையில்,‘‘ அரசு தரப்பில் சாதாரண பணியே வழங்கப்பட்டுள்ளது என்கிறார்கள். எந்த அரசு வேலையும் சாதாரண வேலை இல்லை. அது ஒரு குடும்பத்திற்கு உதவும் பணியே. திறன் வளர்ப்பு பயிற்சி வழங்கி பாதிக்கப்பட்டோரின் குடும்பத்திற்கு அரசு உதவலாம். தகுதியுள்ள குடும்ப உறுப்பினர்களுக்குத் திறன் மற்றும் தொழில்முனைவுப் பயிற்சியை அரசாங்கம் ஏன் விரிவுபடுத்தியிருக்கக் கூடாது.
அரசாங்கம் ஒவ்வொரு குடும்பத்திலும் தலைவர்களையும், தொழில்முனைவோரையும், பிற்காலத்தில் மற்றவர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கக்கூடிய தன்னிறைவு பெற்ற தனிநபர்களையும் உருவாக்கலாம். இதுபோன்ற தொழில்நுட்பப் படிப்புகளுக்கான செலவை அரசாங்கத்தால் ஏற்க முடியும். அரசுப் பணியை அரசால் இலவசமாக வழங்கி விட முடியாது. அது சம்பாதிக்கப்பட வேண்டியதுடன் அதன் மதிப்பும் மதிக்கப்பட வேண்டும்’’ என்றனர்.
