சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற கூட்டம் வருகிற ஆகஸ்ட் 5ம் தேதி காலை 10 மணிக்கு கூடுகிறது. ஆகஸ்ட் 6ம் தேதி 2026-27ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இந்நிலையில் இதுகுறித்து கருத்துக்கேட்பு கூட்டம் சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் வேளாண்துறை அமைச்சர் வினோத் தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்தில் அமைச்சர்கள் செங்கோட்டையன், வெங்கடரமணன், வினோத், நாத், ராஜலட்சுமி, கமலி, விஜய் பாலாஜி, ரஞ்சித் குமார், மதன் ராஜா என 10 அமைச்சர்கள் கலந்து கொண்டனர். கருத்துகேட்பு கூட்டத்தில் விவசாயிகள், முட்டை உற்பத்தியாளர்கள், கைத்தறித்துறையினர் மற்றும் வங்கி பிரதிநிதிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அப்போது நடந்த ஆலோசனையில், ஆகஸ்ட் 6ம் தேதி வேளாண்மை பட்ஜெட்டை அமைச்சர் வினோத் தாக்கல் செய்ய உள்ளது குறித்தும், வேளாண் பட்ஜெட்டில் என்னென்ன முக்கிய அறிவிப்புகள் வெளியிடலாம் என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது.கூட்டத்தில் பேசிய அமைச்சர் வினோத், ‘‘ விவசாயிகளிடம் கருத்துகள் கேட்டு வேளாண் தனி நிதிநிலை அறிக்கை தயாரிக்கப்பட உள்ளது. கால்நடை, மீன்வளம், கூட்டுறவு ஆகிய துறைகளுக்கு வேளாண் நிதிநிலையில் முக்கிய அறிவிப்புகள் இடம்பெறும். மேலும், விவசாயிகள் வைக்கின்ற ஒவ்வொரு கோரிக்கையையும் கவனமாக பரிசீலிக்கப்படும்.பெண் விவசாயிகளுக்கும் வேளாண் பட்ஜெட்டில் முன்னுரிமை அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது’’ என்றார்.
