இன்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா; உயர்கல்வித்துறை அமைச்சர்,எம்பி, எம்எல்ஏ புறக்கணிக்க முடிவு: தமிழ்த்தாய் வாழ்த்தை 3வதாக பாடும் முடிவிற்கு எதிர்ப்பு

 

நெல்லை: மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் மூன்றாவது பாடப்படும் என்று அறிவித்திருப்பதை கண்டித்து இன்று நடைபெறும் விழாவை உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் மற்றும் எம்பி, எம்எல்ஏ புறக்கணிக்க முடிவு எடுத்துள்ளனர்.
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா இன்று (செவ்வாய்) நடக்கிறது. இதில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட வேண்டும் என்று ராஜ்பவனில் இருந்து உத்தரவு வந்திருப்பதாக துணைவேந்தர் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். இதற்கு நெல்லை எம்பி ராபர்ட் புரூஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை: நெல்லை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் தமிழக கவர்னர் கலந்து கொள்ளும் நிலையில் உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் கலந்து கொள்வதாக இருந்தது. இந்நிகழ்ச்சியில் முதலில் வந்தே மாதரம் பாடலும், 2வதாக தேசிய கீதமும், மூன்றாவது தமிழ்த்தாய் வாழ்த்தும் பாடப்படும் என்று கவர்னர் அலுவலகத்திலிருந்து அறிக்கை அனுப்பப்பட்டிருப்பது கண்டிக்கதக்கது. மேலும் இதை கடைப்பிடிக்கவில்லை என்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்திருப்பது ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் செயலாகும்.

தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை இயற்றிய மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் அவர் இயற்றிய தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் மூன்றாவது பாடலாக பாடப்படும் என்று அறிவித்திருப்பது, அவரை இழிவுபடுத்தும் செயலாகும். எனவே இன்று நடைபெறும் இந்த பட்டமளிப்பு விழாவை உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் மற்றும் எம்பி என்ற முறையில் நானும் கலந்து கொள்வதை தவிர்க்கிறோம்.

பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்பட வேண்டும். இல்லையேல் விழாவை ரத்து செய்ய வேண்டும். இதுதான் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு நாம் செய்யும் மரியாதை. இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார். எம்எல்ஏவும் புறக்கணிப்பு: கடைநல்லூர் தொகுதி எம்எல்ஏ திமு ராசேந்திரனும் துணை வேந்தர் செயல்பாடுகளை வன்மையாக கண்டிப்பதோடு விழாவில் கலந்து கொள்ள மாட்டேன் என்று தெரிவித்து உள்ளார்.

Related Stories: