நெல்லை: சோபா கொடுத்து அதிமுக எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குவதுதான் அரசின் முழு நேர வேலையாக உள்ளது என நெல்லையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். முதல்வர் விஜய்யை விமர்சித்த வழக்கில் கைதாகி, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள விளாத்திகுளம் எம்எல்ஏ மார்க்கண்டேயனை திமுக இளைஞரணி செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் நேற்று சந்தித்துப் பேசினார். அப்போது அவர் உடல் நலன் குறித்து விசாரித்தார்.
பின்னர் அவர் சென்னை செல்வதற்காக விமான நிலையம் செல்லும் முன்பு கேடிசி நகரில் உள்ள ஓட்டலில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: விளாத்திகுளம் எம்எல்ஏ மார்க்கண்டேயன் இந்த அரசை தவறாக பேசி விட்டார் என தவெக அரசு வழக்கு போட்டு கைது செய்துள்ளனர். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின் படி பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள மார்க்கண்டேயனை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து விட்டு வந்துள்ளேன். அவர் நலமுடன் தைரியமாக இருக்கிறார். எதிர்க்கட்சிகள் மீது கைது நடவடிக்கை மேற்கொள்வதை மட்டுமே இந்த அரசு பணியாக மேற்கொண்டு வருகிறது. இந்த அரசு வேறு எதையும் செய்யவில்லை. தவெக நிர்வாகிகள் மீது அவர்கள் கட்சியினரே பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.
அது குறித்து நான் சட்டமன்றத்திலும் பேசியுள்ளேன். அதைப்பற்றி அரசு கொஞ்சமும் செவிசாய்க்கவில்லை. இதுவரை அந்த நபர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. திமுக நிர்வாகிகளை, எம்எல்ஏக்களை கைது செய்வதும், அதிமுக எம்எல்ஏக்களை சோபா கொடுத்து விலைக்கு வாங்குவதையும் 24 மணி நேரமும் தவெக அரசு முழு நேர பணியாக மேற்கொண்டு வருகிறது. சோபா கொடுத்து யாரை விலைக்கு வாங்கினார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
