வதந்தி பரப்புவதும், கட்சி மாறுவதுதான் அமைச்சர் நிர்மல் குமாரின் தகுதி; கோமாளி கூட்டத்திற்கு பேச அருகதையே இல்லை: திமுக செய்தி தொடர்பு துணை செயலாளர் சூர்யா கிருஷ்ணமூர்த்தி பதிலடி

 

சென்னை: சென்னையில் நேற்று திமுக செய்தி தொடர்பு துணைச் செயலாளர் சூர்யா கிருஷ்ணமூர்த்தி நிருபர்களிடம் கூறியதாவது: அமைச்சர் நிர்மல் குமார் எங்களுடைய தலைவர்கள் குறித்து வாய்க்கு வந்ததை எல்லாம் தரந்தாழ்ந்து பேசி இருக்கிறார். தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர், இந்த அரசினுடைய அமைச்சர் என்கிற தகுதியெல்லாம் மறந்து, பேக் நியூஸ் பரப்பக்கூடிய, வதந்தி பரப்பக்கூடிய அந்த நிலையிலிருந்து எங்களுடைய தலைவர்கள் குறித்து அவர் பேசியிருக்கிறார்.

அவருடைய தலைவர் எப்படி அநாகரிகமாக பேசுவாரோ, அதே பாணியில், அதே வகையில், அதே வளர்ப்பின் அடிப்படையில் அவர் பேசியிருக்கிறார். ஆனால் எங்கள் தலைவர்கள் எங்களை அப்படி வளர்க்கவில்லை. அதே சமயம் திமுக தலைவர்கள் குறித்து தொடர்ந்து இதுபோல அவர் பேசி வருவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. தகுதி இருக்கா என்று எங்கள் தலைவர்கள் குறித்து கேட்டிருக்கிறார்.

எது தகுதி? ஒரு டெக்ஸ்டைல் கடைக்கு போனீங்கன்னா அங்க இருக்கக்கூடிய கட்சி வேட்டியெல்லாம் எண்ணீங்கன்னா, அதைவிட அதிகமான எண்ணிக்கையில் பல கட்சிகளுடைய கட்சி வேட்டியை வீட்டு அலமாரியில் வச்சிருக்கக்கூடிய சி.டி.ஆர்.நிர்மல் குமாருக்கு இருப்பதுக்கு பேர் தான் தகுதியா? அவர் பரப்பின வதந்திகள் எத்தனை என ஒரு சென்செக்ஸ் எடுக்கலாம். அவர் போயிட்டு வந்த கட்சி எத்தனை அப்படிங்கிறதை கையால எண்ண முடியாது, அந்த அளவிற்கு வதந்தி பரப்புவதையும் கட்சி மாறுவதையும் மட்டுமே தொழிலாக வைத்திருக்கக்கூடிய சி.டி.ஆர். நிர்மல் குமாருக்கு இருக்கறதுக்கு பேர்தான் தகுதியா? அவருடைய கட்டுப்பாட்டில் இரண்டு துறை இருக்கிறது. ஒன்று மின்சாரத் துறை, சட்டத்துறை.

மின்சாரத் துறையில் தினசரி மின்வெட்டு என்று தமிழ்நாடு முழுக்க போராட்டங்கள் நடக்காத நாளே இல்லை என்கிற அளவிற்கு இரவில் மக்கள் வீதியில் வந்து ‘‘எங்களுக்கு கரண்ட் கொடுங்க’’ என்று நடுரோட்டில் நின்று கதறிக் கொண்டிருக்கிறார்கள். மின்சார கட்டணத்தின் விலை உயர்வு நெஞ்சில் கை வச்சுட்டு உட்காரும் அளவுக்கு ஷாக் அடிக்கக்கூடிய அளவிற்கு உயர்ந்திருக்கிறது. அறிவிக்கப்படாத கட்டண உயர்வாக அது இருக்கிறது. இதுகுறித்தெல்லாம் எந்த பதிலும் இல்லாத, எந்த அக்கறையும் இல்லாத, எந்த அறிவும் இல்லாத சி.டி.ஆர். நிர்மல் குமார் எங்கள் தலைவர்களுடைய தகுதி குறித்து கேள்வி எழுப்புகிறார்.

அவருடைய இன்னொரு துறை சட்டத்துறை. அதில் என்ன நடக்கிறது என்றால், இன்றைக்கு காலையில் எல்லாரும் பார்த்திருப்பீர்கள், ஒரு ஆடியோ வைரல் ஆயிற்று, அரசு வழக்கறிஞர் பதவிக்கு மற்றவர்களுக்கு ரூ.15 லட்சம், உனக்கு ரூ.12 லட்சம் என்று ஏதோ ஆடி ஆபர் கொடுப்பது மாதிரி அரசு வழக்கறிஞர் பதவியை ஆபரில் விற்பது போல் விற்றுக் கொண்டிருக்கிறார்கள். உங்களுடைய துறையில் நடக்கக்கூடிய இவ்வளவு பெரிய ஊழல் குறித்து இதுவரைக்கும் சி.டி.ஆர்.நிர்மல் குமார் வாய் திறந்திருப்பாரா? இதுகுறித்து கட்டுப்படுத்துவதற்கு எந்த நடவடிக்கையாவது எடுத்திருப்பாரா? இதையெல்லாம் கட்டுப்படுத்த முடியாத அவர் எங்களுடைய தலைவர்களின் தகுதி பற்றி பேசுவது எவ்வளவு நகைச்சுவை, அது ஒரு கோமாளித்தனமான பேச்சாகத்தான் பார்க்க வேண்டியிருக்கிறது.

இன்னொரு பக்கம், பாலியல் புகார் கொடுக்கப்பட்ட ஒரு பெண் தவெக எம்.எல்.ஏ ‘‘என்னை மிரட்டுகிறார்’’ என்று குற்றச்சாட்டு வைக்கிறார். அந்த எம்.எல்.ஏவுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு கொடுக்கிறது இந்த அரசு. ஒரு மந்திரி ஸ்டேடியத்துக்குள் உட்கார்ந்து கொண்டு மாத்திரை நுணுக்குகிறார். அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை.
இன்றைக்கு ஒரு அமைச்சரின் ஆடியோ ரிலீஸ் ஆகியிருப்பதாக தகவல் வருகிறது. அதில் ‘‘கொன்னு வெளியே எடுத்துருவேன்’’ ‘‘என் பார்டரை தாண்டாதே’’ என்றெல்லாம் டயலாக் இருக்கிறது. இந்த மாதிரியான கேளிக்கூத்தை எல்லாம் செய்யும் தவெக பாசிச கோமாளிக் கூட்டத்திற்கு எங்கள் தலைவர்களை பற்றி பேச தகுதியோ அருகதையோ இல்லை.

* பாஜவை கண்டிக்கிறேன்னு விஜய்யை பேச சொல்லுங்க…

‘‘இன்றைக்கு இந்திய நாடு முழுக்க நீட் தேர்வுக்கு எதிராக, பாஜவுக்கு எதிராக மக்கள் போராடி வருகிறார்கள். மாணவர்கள் ரோட்டில் வந்து உட்கார்ந்திருக்கிறார்கள். மாணவர் சமுதாயம் ஒன்று திரண்டு ஒரு மந்திரியையே பதவியிலிருந்து இறக்கியிருக்கிறது. அதுகுறித்து வாயே திறக்காத ஒருவர் இருக்கிறார் என்றால், அவர் இந்த தமிழ்நாட்டின் முதலமைச்சர்தான்.கோவைக்கும் மதுரைக்கும் மெட்ரோ கிடையாது என்று இரண்டாவது முறையாக ரிஜெக்ட் பண்ணியிருக்கிறார்கள். அதை எதிர்த்து இப்போது வரை முதலமைச்சர் வாயே திறக்கவில்லை. நிதியாண்டின் முதல் குவாட்டரில் போன ஆண்டை விட இந்த ஆண்டு ஒன்றிய அரசாங்கத்தின் நிதி ரூ.2,500 கோடி குறைந்திருப்பதாக செய்தி வருகிறது.

அதை எதிர்த்து கேள்வி கேட்பதற்கு இந்த முதலமைச்சருக்கு திராணி கிடையாது. தமிழ்த்தாய் வாழ்த்தை மூன்றாவதாக தான் பாடுவோம் என்று தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய ஒரு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பப்ளிக்காக செய்தி கொடுக்கிறார். அந்த துணைவேந்தரை கண்டிப்பதற்கு வக்கு கிடையாது. முடிஞ்சா பாஜவைக் கண்டிக்கிறேன், பாஜவை எதிர்க்கிறேன் என்று உங்க தலைவர் ஒரே ஒரு வார்த்தை பேசச் சொல்லுங்கள். நீட் போராட்டத்துக்கு தவெக என்ன செய்தது. ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்த பிறகு மாணவர்களை சந்திக்க அமைச்சர் ராஜ் மோகன் செல்கிறார். பாஜ என்ற வார்த்தையை கூட உச்சரிக்க பயம்’’ என்று சூர்யா கிருஷ்ணமூர்த்தி கூறினார்.

* லாட்டரியில் கவனம் செலுத்துபவர்களுக்கு மேகதாது வழக்கு பற்றியெல்லாம் புரியாது: ஆதவுக்கு ரகுபதி பதிலடி

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக முன்னாள் அமைச்சர் ரகுபதி நேற்று அளித்த பேட்டி: தமிழ்நாட்டிற்குச் சேரவேண்டிய காவிரி நீரைப் போராடிப் பெறுவதிலும், மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமைகளைப் பாதுகாப்பதிலும் திமுக எப்போதும் உறுதியாக இருந்து வந்துள்ளது. தவெக அரசின் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, நேற்றைய தினம் திமுக அரசின் சட்டப்பூர்வ நடவடிக்கைகள் குறித்து உண்மைக்கு மாறான பல கருத்துகளை தெரிவித்துள்ளார். இந்தியாவிலேயே சிறந்த சட்ட வல்லுநர்களைக் கொண்டு வழக்குகளை சிறப்பாக நடத்தி வெற்றிபெற்ற அரசு திமுக அரசு.

ஒரு அமைச்சர் இவ்வாறு பொய்யான தகவலை தெரிவிக்க கூடாது. குழந்தையே பிறக்காத போது பெயர் வைப்பதைப் போன்ற சூழல்தான் இது. ஆனால் ஆதவ் அர்ஜுனாவிற்கு இதெல்லாம் புரியாது, புரிய வாய்ப்பும் கிடையாது. ஏன் என்றால் அவர்கள் லாட்டரியில் கவனம் செலுத்துபவர்கள் இப்போது புதிதாக அரசியலுக்கு வந்திருக்கிறார்கள். மேகதாது அணையைக் கட்டுவதற்கு திமுக அரசு ஒரு சொட்டு கூட, ஒரு படி கூட, ஒரு அங்குலம் கூட அனுமதித்தது கிடையாது.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: