சென்னை: கிண்டி அரசு உயர் சிறப்பு மருத்துவமனையில் முறையான சிகிச்சை அளிக்காததால் 17 வயது சிறுவன் உயிரிழந்துள்ளதாக பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர். சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த அய்யனாரப்பன் என்பவர் எலக்ட்ரீஷியன் வேலை செய்து வருகிறார். கடந்த 16ம் தேதி அய்யனாரப்பன் தன்னுடைய 17 வயது மகன் தர்ஷனுடன் அசோக் நகர் நோக்கி செல்லும்பொழுது கிண்டி கத்திப்பாரா மேம்பாலம் அருகே மாநகர மின்சார பேருந்து மோதி விபத்தில் சிக்கினர்.
உடனடியாக அய்யனாரப்பன் மற்றும் தர்ஷனை மீட்டு பொதுமக்கள் சென்னை கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு மருத்துவர்கள் இருவருக்கும் உடனடியாக சிகிச்சை அளித்துள்ளனர். இதில் அய்யனாரப்பன் குணமடைந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை தர்ஷனுக்கு எலும்பில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் கூறி அவருக்கு அறுவை சிகிச்சை செய்துள்ளனர்.
சனிக்கிழமை தர்ஷன் நன்றாக இருந்ததாக பெற்றோர் கூறுகின்றனர்.அதனை தொடர்ந்து சனிக்கிழமை இரவிலிருந்து தர்ஷனுக்கு உடல்நிலை சரியாமல் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் மருத்துவர்கள் அவரை முறையாக கவனிக்காமல் அலட்சியத்துடன் சிகிச்சை அளித்ததாகவும் பெற்றோர், உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்நிலையில் மருத்துவர்கள் நுரையீரல் தொற்று ஏற்பட்டு தர்ஷன் நேற்று உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர். தங்கள் மகன் உயிரிழப்புக்கு மருத்துவமனை அலட்சியமே காரணம். எனவே நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் கண்ணீருடன் வீடியோ வெளியிட்டுள்ளனர். தர்ஷன் கல்லூரியில் சேர இருந்தது குறிப்பிடத்தக்கது.
