சென்னை: பாமக சார்பில் இந்த ஆண்டுக்கான வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கை கடந்த வாரம் வெளியிடப்பட்டது. இந்நிலையில், நேற்று சென்னையில் 24வது பொது நிழல் நிதிநிலை அறிக்கையை பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டார். இந்த அறிக்கையில் 109 தலைப்புகளின் கீழ் மொத்தமாக 341 யோசனைகள் இடம்பெற்றுள்ளன. அப்போது அன்புமணி பேசியதாவது: 2026-27ம் ஆண்டில் தமிழ்நாட்டின் வருவாய் வரவுகள் ரூ.6,71,891 கோடியாக இருக்கும். நடப்பாண்டின் மொத்த செலவினம் ரூ.6,96,149 கோடியாகவும், வருவாய் செலவினம் ரூ.6,10,712 கோடியாகவும் இருக்கும்.
2026-27ம் ஆண்டில் தமிழக அரசின் வருவாய்க் கணக்கில் ரூ.61.179 கோடி உபரியாக இருக்கும். நிதிப்பற்றாக்குறை ரூ.24,258 கோடி என்ற அளவில் குறைவாக இருக்கும். ஒன்றிய அரசுக்கு தொடர் அழுத்தம் கொடுத்து மெட்ரோ திட்டத்தை கொண்டு வர வேண்டும். கல்வியை மீண்டும் மாநில பட்டியலுக்கு கொண்டு வரவேண்டும். கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வந்தால் நுழைவு தேர்வு போன்ற பிரச்னைகள் வராது. காவிரி விவகாரம் தொடர்பாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கட்சியினரும் பிரதமரை சந்திக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
