சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்திய 4 கிலோ தங்கம் பறிமுதல்: வடமாநில பயணி கைது

 

சென்னை: சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்திய 4 கிலோ தங்க கட்டிகளை கடத்திய வடமாநில பயணியை கைது செய்யப்பட்டார். சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, சென்னை விமான நிலைய சுங்கத்துறை, ஏர் இன்டெலிஜென்ட் அதிகாரிகள் நேற்று முன்தினம் இரவு சென்னை சர்வதேச விமான நிலையத்தில் வருகை பயணிகள் அனைவரையும் தீவிரமாக கண்காணித்து சந்தேகப்பட்ட பயணிகளை நிறுத்தி சோதனை நடத்தினர்.

நள்ளிரவு சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு பயணிகள் விமானம் ஒன்று சர்வதேச முனையத்திற்கு வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளை ஏர் இன்டெலிஜென்ட் அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர். அப்போது வட மாநிலத்தைச் சேர்ந்த சுமார் 30 வயது இளைஞர் ஒருவர் சிங்கப்பூருக்கு சுற்றுலா பயணியாக டெல்லியில் இருந்து சென்று விட்டு மறுநாளே சிங்கப்பூரில் இருந்து விமானத்தில் சென்னைக்கு திரும்பி வந்திருந்தார். அதிகாரிகளுக்கு அந்த பயணி மீது சந்தேகம் ஏற்பட்டது. அவரை சென்னை விமான நிலைய சுங்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர். அதில், சர்வதேச தங்கம் கடத்தல் கும்பலிடம் கடத்தல் குருவியாக செயல்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து, போலீசார் அந்த நபரிடம் இருந்த சூட்கேஸை திறந்து பார்த்தபோது ரகசிய அறையில் தங்கக் கட்டிகள் மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். அந்த பயணியிடமிருந்து சுமார் 4 கிலோ (3.96 கிலோ) சுத்தமான 24 கேரட் தங்கக்கட்டிகளை பறிமுதல் செய்தனர். அதன் சர்வதேச மதிப்பு சுமார் ரூ.5.80 கோடி. இதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் தங்கத்தை சிங்கப்பூரில் இருந்து கடத்திக் கொண்டு வந்த வடமாநில பயணியை கைது செய்தனர். சென்னை விமான நிலையத்தில் நீண்ட நாட்களுக்குப் பின்னர் மிகப்பெரிய அளவில் கடத்தல் தங்கம் சிக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

Related Stories: