அகமதாபாத்: குஜராத்தின் நவசாரி மாவட்டத்தில் உறங்கிக்கொண்டிருந்த மூன்று கிராமவாசிகளை நெக்டார் என்ற ஜெர்மன் ஷெப்பர்ட் நாய் தனது உயிரை கொடுத்து காப்பாற்றியுள்ளது. உள்ளூர் உணவகம் ஒன்றின் வெளியே கட்டில்களில் உறங்கிக் கொண்டிருந்த மூன்று பேரை சிறுத்தை ஒன்று தாக்க முற்பட்டுள்ளது. அப்போது விஷால் படேலுக்குச் சொந்தமான இரண்டரை வயது ஜெர்மன் ஷெப்பர்ட் நாய் சிறுத்தையை தடுத்து போராடியது. இறுதியில் சிறுத்தை மீண்டும் காட்டிற்குள் தப்பி ஓடியது.
கடுமையான போராட்டத்தின் சத்தம் கேட்டு அந்த மூன்று பேரும் எழுந்து பார்த்த போது தாக்குதலில் இருந்து தாங்கள் நூலிழையில் தப்பித்ததை உணர்ந்தனர்.அந்த மூன்று பேரும் காயமின்றி தப்பித்தபோதிலும், சிறுத்தையை எதிர்கொண்ட ஜெர்மன் ஷெப்பர்ட் நாய் (நெக்டார்) சம்பவ இடத்திலேயே காயம் காரணமாக உயிரிழந்தது.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, சிறுத்தையைப் பிடிப்பதற்காக வனத்துறை தேடுதல் நடவடிக்கையைத் தொடங்கியது. விலங்கைப் பிடிப்பதற்காக அப்பகுதியில் கூண்டுகள் அமைக்கப்பட்டுள்ளதாக சிக்லி சரக வன அதிகாரி தெரிவித்துள்ளார். சிறுத்தை இன்னும் பிடிபடாமல் இருக்கும் நிலையில், கிராம மக்கள் விழிப்புடன் இருக்குமாறும், இரவு நேரங்களில் தனியாக வெளியே செல்வதைத் தவிர்க்குமாறும் வனத்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
