விசாரணை என்ற பெயரில் பெண்ணின் படுக்கையறைக்குள் நுழைந்த போலீசுக்கு அபராதம்: மும்பை உயர் நீதிமன்றம் கண்டனம்

மும்பை: பெண்ணின் படுக்கையறைக்குள் சட்டவிரோதமாக நுழைந்து சோதனை நடத்திய போலீசார், அந்தப் பெண்ணுக்கு 10,000 ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் நடந்த விபத்து வழக்கு ஒன்றில், அங்குள்ள போலீசார் உரிய சட்ட வழிமுறைகளைப் பின்பற்றாமல் 26 வயதுடைய பெண்ணின் வீட்டிற்குள் புகுந்து, அவரது படுக்கையறையில் சோதனை நடத்தியதோடு, அவரது செல்போனையும் பறிமுதல் செய்தனர். இந்த சட்டவிரோத நடவடிக்கையை எதிர்த்து அந்தப் பெண் நாக்பூர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த மும்பை உயர் நீதிமன்ற நாக்பூர் கிளையின் நீதிபதிகள் ஊர்மிளா ஜோஷி மற்றும் ஜோஷி பால்கே ஆகியோர் அடங்கிய அமர்வு, படுக்கையறையில் போலீசார் நுழைந்து சோதனை நடத்தியது பெண்ணின் தனிமனித உரிமைக்கு எதிரானது என்று கூறி கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும், உரிய விதிகளைப் பின்பற்றாமல் சட்டவிரோதமாக நுழைந்த போலீசாரிடமிருந்து 10,000 ரூபாய் அபராதமாக வசூலித்து, அதனை 2 மாதங்களுக்குள் அந்தப் பெண்ணுக்கு வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து நீதிபதிகள் கூறுகையில், ‘அரசியலமைப்புச் சட்டத்தின் 21வது பிரிவு உறுதி செய்யும் வாழ்வுரிமை மற்றும் தனிமனித சுதந்திரத்தின் முக்கிய அங்கமாகத் தனிமனித ரகசியம் காக்கும் உரிமை திகழ்கிறது. அதனை எக்காரணம் கொண்டும் மீறக்கூடாது. வழக்குப் புலனாய்வு என்ற பெயரில் போலீசார் சட்டவிரோதமாகக் கைப்பற்றும் ஆதாரங்களுக்கு எந்தவித சட்டப்பூர்வ அங்கீகாரமும் கிடையாது’ என்று குறிப்பிட்டுள்ளனர்.

Related Stories: