பாட்னா: பீகார் இடைத்தேர்தலில் முதன்முறையாக போட்டியிடும் ஜன சுராஜ் கட்சி தலைவர் பிரசாந்த் கிஷோர் தனது 198 கோடி ரூபாய் சொத்து விவரத்தை வெளியிட்டுள்ளார். பீகாரில் பாஜகவின் கோட்டையாகக் கருதப்படும் பாங்கிபூர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில், ஜன சுராஜ் கட்சியின் தலைவரும், தேர்தல் வியூக வகுப்பாளருமான பிரசாந்த் கிஷோர் முதன்முறையாகப் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த வேட்புமனுவுடன் அவர் தாக்கல் செய்துள்ள சொத்து விவர உறுதிமொழிப் பத்திரத்தில், ‘எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் அசையும் மற்றும் அசையா சொத்துகளாகச் சுமார் 198 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் உள்ளன’ என்று தெரிவித்துள்ளார். இதில் அசையும் சொத்துகளின் மதிப்பு 111.78 கோடி ரூபாயாகவும், அசையா சொத்துகளின் மதிப்பு 86.29 கோடி ரூபாயாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அவரது மனைவி ஜான்வி தாஸ் பெயரில் வேதாஸ் வென்ச்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் 95.26 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகள் இருப்பதும், பிரசாந்த் கிஷோர் பெயரில் எச்டிஎப்சி வங்கியில் 7.36 கோடி ரூபாய் நிலையான வைப்பு நிதி இருப்பதும் தெரியவந்துள்ளது. இவற்றுடன் சுமார் 6.3 கோடி ரூபாய் வங்கி கடன் பொறுப்புகள் உள்ள நிலையில், வருமான வரி, ஜிஎஸ்டி அல்லது இதர ஒன்றிய அரசு நிலுவைத்தொகைகள் எதுவும் இல்லை என்றும் அவர் தனது உறுதிமொழியில் குறிப்பிட்டுள்ளார்.
