குடும்பத் தகராறு காரணமாக பிறந்த நாளில் மனைவியை சுட்டுக்கொன்ற போலீஸ்காரர்: டெல்லியில் நடுரோட்டில் நடந்த கொடூரம்

புதுடெல்லி: டெல்லியில் குடும்பத் தகராறு காரணமாக பிறந்தநாளன்றே மனைவியை சுட்டுக்கொலை செய்துவிட்டு தப்பியோடிய போலீஸ் காவலரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். டெல்லி வினோத் நகர் பகுதியில் வசித்து வந்த தம்பதியினரான டெல்லி கிழக்கு மாவட்ட வாகன திருட்டு தடுப்பு பிரிவில் போலீஸ் காவலராக பணியாற்றும் மனிஷ் பதி என்பவருக்கும், அசோக் விஹாரில் உள்ள பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்த பிரியங்கா (24) என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி அடிக்கடி குடும்ப தகராறு நடந்து வந்த நிலையில், சுமார் 8 மாதங்களாக தனது சகோதரர் வீட்டில் பிரியங்கா வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று பிரியங்காவின் பிறந்தநாளன்று அதிகாலை 2 மணியளவில் இருவரும் தங்களது பைக்கில் வெளியே சென்று கல்யாண்பூரி பகுதியில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி மருத்துவமனை அருகே கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டபோது, மனிஷ் பதி தனது பைக்கை நிறுத்தியதும் அதிலிருந்து இறங்கிய பிரியங்காவை தான் வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்துவிட்டு சம்பவ இடத்திலிருந்து தப்பியோடியுள்ளார். ரத்த வெள்ளத்தில் கிடந்த பிரியங்காவை அந்த வழியாக வந்த ஆட்டோ டிரைவர் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளதை அடுத்து, தப்பியோடிய போலீஸ்காரரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘தம்பதியிடையே அடிக்கடி பிரச்னை நடந்து வந்துள்ளது, சம்பவம் நடந்த அன்றும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது சிசிடிவி காட்சிகள் மூலம் தெரியவந்துள்ளது, மனிஷ் பதியை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது’ என்றார்.

Related Stories: