சிறார் பாதுகாப்பு இல்லத்தில் காவலாளியை கொன்று 4 கைதிகள் தப்பியோட்டம்

பிலாஸ்பூர்: சட்டீஸ்கர் மாநில சிறார் பாதுகாப்பு இல்லத்தில் காவலாளியை கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டு தப்பியோடிய நான்கு கைதிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். சட்டீஸ்கர் மாநிலம் சுர்குஜா மாவட்டத்தில் கடந்த ஜூன் 23ம் தேதி நடந்த சம்பவத்தில், கனமழை மற்றும் மின்வெட்டைப் பயன்படுத்தி அரசு கூர்நோக்கு இல்லத்தில் இருந்து 11 சிறுவர்கள் தப்பியோடினர்.

அதன் தொடர்ச்சியாக, பிலாஸ்பூர் மாவட்டம் சர்கண்டா போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட அரசு சிறார்கள் பாதுகாப்பு இல்லத்தில் நேற்று அதிகாலை 2 மணி அளவில், கான்ட்ராக்டர் அடிப்படையில் காவலாளியாக பணியாற்றி வந்த தஹத்பூர் பகுதி அரைபண்ட் கிராமத்தைச் சேர்ந்த நரேந்திர குமார் காண்டே (40) என்பவர் கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். சிறார் நீதிச் சட்டத்தின் கீழ் குற்றச் செயல்களில் ஈடுபட்டு இந்த இல்லத்தில் அடைக்கப்பட்டிருந்த நான்கு கைதிகள், 18 வயதைக் கடந்தும் அங்கேயே தங்கியிருந்த நிலையில், இந்த கொலையைச் செய்துவிட்டு தப்பியோடியுள்ளனர்.

இதுகுறித்து பிலாஸ்பூர் போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் சிங் கூறுகையில், ‘கொலைக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. தப்பி ஓடும் நோக்கத்தில் காவலாளியிடம் கதவின் சாவியை கேட்டுள்ளனர். அவர் தர மறுத்ததால், அவரைத் தாக்கி, கைகால்களைக் கட்டி, வாயில் துணியை திணித்து கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டு தப்பியோடியுள்ளனர்; தப்பியோடிய நான்கு பேரும் வெவ்வேறு வழக்குகளில் விசாரணை கைதிகள் ஆவர்; தொடர்ந்து விசாரணை நடக்கிறது’ என்றார்.

Related Stories: