2019-க்கு பின் அயோத்தியில் அதிகரித்த நில விற்பனை.!! சொத்துக்களை வாங்கி குவித்த முக்கிய பிரமுகர்கள்

லக்னோ: ராமர் கோயில் தீர்ப்புக்கு பிறகு அயோத்தி சுற்றுவட்டாரத்தில் நிலம் விற்பனை அதிகரித்து உள்ளது. அரசியல் மூத்த தலைவர்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பல முக்கிய தரப்பினர் அயோத்தி மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் அதிக அளவு சொத்துக்களை வாங்கி குவித்து உள்ளது அம்பலமாகி உள்ளது.

2019-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் வழங்கிய அயோத்தி தீர்ப்பிற்கு பிறகு, அங்கு நில விற்பனையும் ரியல் எஸ்டேட் தொழிலும் பல மடங்கு அதிகரித்துள்ளது. ராமர் கோயில் திறப்பு மற்றும் மேம்படுத்தப்பட்ட விமான நிலையம் போன்ற புதிய வசதிகளால், உலகெங்கிலும் இருந்து முதலீட்டாளர்கள் அயோத்தியில் நிலம் வாங்க ஆர்வம் காட்டுகின்றனர். 2019-க்கு முன் சதுர அடி ரூ.400 முதல் ரூ.2,000 வரை விற்கப்பட்ட நிலங்கள், தற்போது பல மடங்கு உயர்ந்துள்ளன. கோயிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஒரு சதுர அடி ரூ.20,000 வரை விற்பனையாகிறது. இந்திய நடிகர் அமிதாப் பச்சன் போன்ற பிரபலங்கள் அயோத்தியில் கோடிக்கணக்கிலான மதிப்பில் நிலங்களை வாங்கியுள்ளனர்.

இதனிடையே அயோத்தி ராமர் கோயில் கட்டுமானப் பணிகளுக்குப் பின், அங்குள்ள நிலங்களை அரசியல் பிரமுகர்கள், அரசு உயர் அதிகாரிகள் மற்றும் அவர்களின் உறவினர்கள் பெருமளவில் வாங்கி குவித்துள்ளதாகப் புகார்கள் எழுந்துள்ளன. தலித் மக்களுக்குச் சொந்தமான நிலங்களை விதிகளை மீறி வாங்கி குவிப்பதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.

உத்தரப் பிரதேச காவல்துறை எஸ்டிஎஃப் (STF) தலைவர், உள்துறைச் செயலாளர், கல்வித்துறை இணை இயக்குநர் மற்றும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்கள் (SP) ஆகியோரின் குடும்பத்தினரும், உறவினர்களும் அயோத்தி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிலங்களை வாங்கியுள்ளது அம்பலமாகியுள்ளது. தவிர அருணாச்சல பிரதேச துணை முதல்வர் சௌனா மெய்னின் மகன்கள், பாஜக முன்னாள் எம்பி பிரிஜ் பூஷண் சிங்கின் மகன் மற்றும் பல ஆளும் கட்சி, எதிர்க்கட்சிப் பிரமுகர்களின் உறவினர்கள் அயோத்தியில் பல கோடி ரூபாய் மதிப்பில் நிலங்களை வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

 

Related Stories: