புதுடெல்லி: பிரதமர் மோடி வெளிநாடுகளில் இருந்து தேசத்திற்கான வெற்றியை ஈட்டித் திரும்பிய நிலையில், வெளிநாட்டில் இருக்கும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி சதித்திட்டங்களை வகுத்துக் கொண்டிருக்கலாம் என பாஜ விமர்சனம் செய்துள்ளது. இந்தோனேசியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய 3 நாடுகளின் பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி நாடு திரும்பி உள்ளார்.
இப்பயணத்தின் வெற்றிகள் குறித்து டெல்லியில் உள்ள பாஜ தலைமையகத்தில் அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாந்தோ மோடியின் பல கொள்கைகளை பின்பற்றியதாக கூறினார். இதே போல, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மோடியை சிறிதளவாவது பின்பற்றியிருந்தாலும் கூட 99 தேர்தல்களில் தோல்வியை சந்தித்திருக்க மாட்டார்.
மோடி ஆட்சியில் இந்தியாவில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் அங்கீகரித்தார். ஆனால் இந்தியாவில் உள்ள காங்கிரஸ் கட்சி அதை ஏற்க மறுக்கிறது. நமது எதிர்க்கட்சிகளும் இதிலிருந்து பாடம் கற்க வேண்டும் என நினைக்கிறேன். பிரதமரும் வெளிநாடு சென்றார். ராகுல் காந்தியும் வெளிநாடு சென்றுள்ளார். பிரதமர் மோடி வெற்றிகளுடன் திரும்பி உள்ளார். ராகுல் காந்தியோ நிச்சயமாக ரகசியமாக சதித்திட்டங்களை வகுத்துக் கொண்டிருப்பார்.
மோடி ஆட்சியில் நடைபெற்று வரும் நல்ல பணிகளை எவ்வாறு சீர்குலைப்பது என திட்டமிட்டுக் கொண்டிருப்பார். ராகுல் காந்தி இப்போது எங்கிருக்கிறார் என்பதை கண்டுபிடியுங்கள் பார்க்கலாம். கடந்த 10ம் தேதி பிரயாக்ராஜில் அவரது நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டது. பாட்னாவில் நடக்க இருந்த நிகழ்ச்சியும் ஒத்திவைக்கப்பட்டது. லண்டன், ஐஸ்லாந்து, ஜெர்மனி போன்ற நாடுகளுக்கு சென்று வந்த முத்திரைகள் ராகுலின் பாஸ்போர்ட்டில் இருக்கலாம். யாருக்கு தெரியும்? இவ்வாறு கூறி உள்ளார்.
