அயோத்தி: அயோத்தி ராமர் கோயில் மற்றும் ராம்கதா அருங்காட்சியகம் கட்ட ரூ.1,600 முதல் ரூ.1,800 வரை செலவாகி இருப்பதாக கட்டுமான குழு தலைவர் நிருபேந்திர மிஸ்ரா தெரிவித்துள்ளார். அயோத்தியில் ராமர் கோயில் கடந்த 2024ம் ஆண்டு ஜனவரி 22ம் தேதி திறக்கப்பட்டது. ஆனாலும் கோயிலின் பிற கோபுரங்கள் கட்டுமான பணி தொடர்ந்து நடந்து வருகிறது. மேலும், கோயில் வளாகத்தில் ராம கதா அருங்காட்சியகமும் பிரமாண்டமாக கட்டப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ராமர் கோயில் கட்டுமான குழு தலைவர் நிருபேந்திர மிஸ்ரா அயோத்தியில் நேற்று அளித்த பேட்டியில், ‘‘கோயில் கட்டுமான பணிகள் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி முழுமையாக நிறைவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கோயில் கட்டுமானத்திற்கு ஆன மொத்த செலவு ரூ.1,600 கோடி முதல் ரூ.1,800 கோடி வரை இருக்கும். அருங்காட்சியகம் மட்டும் ரூ.100 கோடியில் கட்டப்பட்டு வருகிறது. இந்த அருங்காட்சியகம் இன்னும் 6 அல்லது 8 மாதங்களில் கட்டி முடிக்கப்படும்’’ என்றார்.
