சிவகாசி: விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் அதிமுக ஆலோசனை கூட்டம் ேநற்று மாலை நடைபெற்றது. அதில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியதாவது: தவெகவுக்கு மக்கள் செல்வாக்கு இருக்கிறது என்றால் அந்த கட்சி தமிழகத்தில் 150 இடங்களில் வெற்றி பெற்று இருக்க வேண்டும். ஆனால் அவர்களுக்கு முழு வெற்றி கிடைக்கவில்லை. இந்த வெற்றி நிலையான வெற்றி கிடையாது. உள்ளாட்சி தேர்தலில் தவெகவுக்கு மக்கள் சங்கு ஊதுவார்கள்.
முதல்வர் பதவியில் உள்ள விஜய், முன்னாள் முதல்வர் ஸ்டாலினை கண்ணியக்குறைவாக பேசக்கூடாது. ஆசைவார்த்தை கூறி மாற்று கட்சி நிர்வாகிகளை தவெகவிற்கு அழைக்கிறார்கள். இதற்கு ஆசைப்பட்டு சிலர் இங்கிருந்து சென்றுவிட்டார்கள். அவர்கள் சென்றதால் அதிமுக அழிந்து விடாது. சில தவெக அமைச்சர்களின் செயல்பாடுகள் லூசுத்தனமாக உள்ளது. அறநிலையத்துறை அமைச்சர் முறுக்கு எப்ப சுட்டீங்க? எப்படி சுட்டீங்க என லூசு போன்று ஆய்வு நடத்தி வருகின்றார். தொழில்துறை அமைச்சர் கரகாட்டக்காரி போன்று செயல்பட்டு வருகின்றார்.
மு.க.ஸ்டாலினுக்கு எப்போது கோபம் வருகிறதோ, அப்போது தமிழகத்தில் தவெக ஆட்சி இருக்காது. ஸ்டாலினுக்கு கோபம் வரும். வரணும். தவெக ஆட்சியில் சிவகாசி பட்டாசு தொழிலுக்கு கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. முதல்வர் விஜய், கரூரில் பேசியதை மக்கள் ரசிக்கவில்லை. தமிழகத்தை பல முதல்வர்கள் ஆட்சி செய்துள்ளார்கள். அவர்கள் இப்படி நடந்து கொள்ளவில்லை. விஜய், கரூரில் நடந்து கொண்ட விதம் வருத்தம் அளிக்கிறது.
இவ்வாறு பேசினார்.
* ‘தோசை சுடுகிறார் அமைச்சர் ஜெகதீஸ்வரி’
விருதுநகரில் நடந்த அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் ராஜேந்திரபாலாஜி பேசுகையில், ‘‘தேர்தல் நேரத்தில் தவெக கொடுத்த வாக்குறுதிகள் என்னாச்சு? மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500 பணம் என்னாச்சு? ஆறு இலவச சிலிண்டர் திட்டம் என்னாச்சு? மக்களை ஏமாற்றி, பொய் வாக்குறுதிகளைக் கொடுத்து ஆட்சியைப் பிடித்த விஜய் மற்றும் அவரது தவெக கட்சியின் ஆட்சி நீண்ட காலம் நீடிக்காது, நிலைக்காது. அமைச்சர் ஜெகதீஸ்வரியை, பொதுமக்கள் கோரிக்கைக்காக பார்க்க சென்றால், தோசை சுட்டு முடித்து விட்டு வந்து பார்க்கிறேன் என கூறுகிறார். இப்படி தான் தற்போது அமைச்சரவை நிலைமை இருக்கிறது’’ என்றார்.
