ஓசூர்: பாஜவுக்கும், தனக்கும் சம்பந்தமில்லை என அண்ணாமலை பேசுவது நடிகர் வடிவேலுவின் காமெடி போல் உள்ளது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் எம்பி கூறினார். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் நீட் தேர்வு பயத்தால் தற்கொலை செய்து கொண்ட மாணவன் வெற்றி ஆனந்தனின் குடும்பத்தினரை, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் எம்பி நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். மாணவனின் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தியபின் அவர் அளித்த பேட்டி: தமிழகத்தில் நீட் தேர்வால் இதுவரை 34 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.
இந்த ஆண்டு மட்டும் 4 பேர் பலியாகியுள்ளனர். டாக்டர் ஆக வேண்டும் என்ற கனவோடு, பயிற்சி மையங்களில் ரூ.4 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை பெற்றோர்கள் செலவழிக்கின்றனர். இந்தியாவில் நீட் பயிற்சி மையங்கள் ரூ.1,36,000 கோடி மதிப்பிலான வியாபாரமாகவும், தமிழகத்தில் மட்டும் ரூ.5,000 கோடி மதிப்பிலான தொழிலாகவும் மாறிவிட்டதாக எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கூறுவது முற்றிலும் உண்மை.
பிரதமர் மோடி தலைமையிலான அரசு, தமிழக மக்களின் உணர்வுகளுக்கோ, பிரச்னைகளுக்கோ ஒருபோதும் செவிசாய்ப்பதில்லை. ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும். புதிய இயக்கங்கள் தொடங்குவதில் எவ்வித தவறும் இல்லை. ஆனால், பாஜவுக்கும், தனக்கும் சம்பந்தமில்லாதது போல் அண்ணாமலை பேசுவது ஆச்சரியமாக உள்ளது.
இது நடிகர் வடிவேலுவின் காமெடி போல், ‘கொண்டையை மறைக்காம விட்டுட்டீங்கப்பா’ என்ற கதையாகத்தான் இருக்கிறது. அவருக்கு எங்களது வாழ்த்துகள். ஓசூர், கிருஷ்ணகிரி மற்றும் திருச்சி ஆகிய இடங்களில் ‘டம்மி’ பல்கலை என்ற பெயரில் மிகப்பெரிய திருட்டுத்தனம் நடைபெற்று வருகிறது. இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்களுக்கு, தமிழக அரசு உரிய தண்டனை பெற்று தரும் என நம்புகிறேன். இவ்வாறு மாணிக்கம் தாகூர் எம்பி கூறினார்.
