40 கொண்டை ஊசி வளைவுகள் நிறைந்த மலைப்பாதையில் பயணிக்க சுற்றுலா பயணிகள் ஆர்வம்

வால்பாறை : பொள்ளாச்சியில் இருந்து வால்பாறை செல்லும் மலைப்பாதையில் அமைந்துள்ள 40 கொண்டை ஊசி வளைவுகள், தமிழகத்தின் மிகவும் அழகிய மலைச் சாலைப் பயணங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது.

பொள்ளாச்சியில் இருந்து சுமார் 64 கிமீ தூரம் கொண்ட இந்த மலைப்பாதை, ஆழியாறு அணையை ஒட்டிய அடிவார பகுதியில் தொடங்கி ஆனைமலை மலைத்தொடரின் சரிவுகளை ஊடறுத்து வால்பாறையை அடைகிறது. கடுமையான ஏற்றம், தொடர்ச்சியான வளைவுகள், பள்ளத்தாக்குகள் மற்றும் பசுமை நிறைந்த மலைக்காட்சிகள் இந்தச் சாலையின் தனிச்சிறப்பாகும்.

40 கொண்டை ஊசி வளைவுகளின் பெரும்பாலான இடங்களில் வாகனங்களை பாதுகாப்பாக நிறுத்தி இயற்கைக் காட்சிகளை ரசிக்க வசதிகள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக ஆழியாறு அணை, தென்னந்தோப்புகள், மலைத் தொடர்கள் மற்றும் அடிவார சமவெளியின் தோற்றம் ஒரே இடத்தில் கண்கொள்ளா காட்சியாக தெரிகிறது.மழைக்காலத்தை தொடர்ந்து மலைச்சரிவுகள் பசுமை போர்த்தி காணப்படுவதால், இந்த பாதையில் பயணிப்பது சுற்றுலா பயணிகளுக்கு தனித்துவமான அனுபவமாக உள்ளது.

சாலையோரங்களில் குரங்குகள், பறவைகள் உள்ளிட்ட வனவிலங்குகளையும் அவ்வப்போது காண முடிவதால் இயற்கை ஆர்வலர்களும் புகைப்படக் கலைஞர்களும் அதிகளவில் வருகை தருகின்றனர்.அதேசமயம், மலைச்சாலையில் தொடர்ச்சியான வளைவுகள் இருப்பதால், வேகமாக வாகனம் ஓட்டுவதைத் தவிர்த்து, போக்குவரத்து விதிகளை கடைபிடித்து பாதுகாப்பாக பயணிக்க வேண்டும் என நெடுஞ்சாலை மற்றும் வனத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

பயணிகள் வருகை அதிகரிப்பு

வால்பாறையில் கடந்த சில நாட்களாக லேசான சாரல், அவ்வப்போது மிதமான வெயில் என இதமான காலநிலை நிலவி வருகிறது. இதனால், தினமும் வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. வியூ பாயிண்ட்கள், அணைகள், பூங்காக்கள் உள்ளிட்ட முக்கிய சுற்றுலாத் தலங்களை பார்வையிட்டு மகிழ்கின்றனர்.

விடுமுறை நாட்களை தவிர சாதாரண நாட்களிலும் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து வருவதால், உள்ளூர் வியாபாரம் அதிகரித்துள்ளதாக வணிகர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: