*மின் பாதைகளை பராமரிக்க விவசாயிகள் கோரிக்கை
சென்னிமலை : சென்னிமலை அருகே மின் கம்பியில் தென்னை மட்டை உரசி தீ பிழம்புகள் விழுந்ததால் கரும்பு காட்டில் தீப்பிடித்தது. இதனால், மின் பாதைகளை பராமரிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னிமலை அருகே அண்ணாமலைபாளையம் சரளைக்காட்டை சேர்ந்தவர் மகேஷ் குமார் (45). இவர், தனது தோட்டத்தில் கரும்பு பயிரிட்டு தற்போது வெட்டும் தருவாயில் உள்ளது.
இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை காற்று அதிகமாக வீசியதால் தனது கரும்பு தோட்டத்தை ஒட்டியுள்ள தென்னை மரத்தில் இருந்து தென்னை ஓலைகள் மின் கம்பியில் உரசியுள்ளது.
இதனால், மின் கம்பிகள் ஒன்றோடு ஒன்று பின்னியதால் தீப்பிழம்பு வெளியேறி கீழே வறண்டு கிடந்த செடி, கொடிகளில் தீ பிடித்துள்ளது. பின்னர், அங்கிருந்து தீ பரவி கரும்பு காட்டுக்குள் தீ பிடித்தது. இதனால், சுமார் அரை ஏக்கர் அளவில் பயிரிடப்பட்டுள்ள கரும்பின் காய்ந்த சருகுகளில் தீப்பிடித்தது.
இது குறித்து சென்னிமலை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டு தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் கரும்புக்கு பெரிய சேதம் ஏற்படாவிட்டாலும் கரும்பு காட்டிற்குள் போடப்பட்டிருந்த சுமார் ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள சொட்டுநீர் கருவிகள் தீயில் எரிந்து சாம்பல் ஆனது.
இது குறித்து விவசாயிகள் கூறுகையில்,“பல இடங்களில் மின் கம்பிகளுக்கு அருகே தென்னை, வாழை மரங்கள் உள்ளதால் இவை மின் கம்பிகளில் உரசி டிரான்ஸ்பார்மர்களில் பயங்கர சத்தம் ஏற்பட்டு மின் சப்ளை துண்டிக்கப்படுகிறது.
இதனால், மின்வாரிய ஊழியர்கள் 2 மாதங்களுக்கு ஒரு முறையாவது மின்பாதைகளை ஆய்வு செய்து விவசாயிகளின் ஒத்துழைப்புடன் மின் கம்பியில் உரசும் தென்னை மற்றும் வாழை மட்டைகளை வெட்டி அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.
ஒரே நாளில் 4 விபத்து: மொடக்குறிச்சி அடுத்த சோளங்காபாளையத்தில் சேகர் என்பவருக்கு சொந்தமான கரும்பு காட்டில் நேற்று முன்தினம் தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்த மொடக்குறிச்சி தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று 2.15 மணி வரை போராடி தீயை அணைத்தனர்.
இதில் கரும்பு பயிர், கரும்பு சோகை, 70 தென்னை மரங்கள் (தென்னம் பிள்ளைகள்), வாழை தோட்டத்தில் இருந்த சருகுகள் தீக்கிரையாகின. மின் கம்பியில் இருந்து விழுந்த தீப்பொறியால் தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. சேத மதிப்பு கணக்கிடப்படுகிறது.
46 புதுார் பெரியார் நகர் சின்னியம்பாளையத்தில் குப்பை கிடங்கு உள்ளது. அங்கு குப்பை தீ வைக்கப்பட்டது. காற்றில் தீ பரவி அருகில் இருந்த பறையன்காடு தோட்டத்திலும் தீ விபத்து ஏற்பட்டது. இதில், வைக்கோல் போர் எரிந்து சாம்பலானது. தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் 1 மணிக்கு அங்கு சென்றனர். 2.15 மணி வரை போராடி தீயை அணைத்தனர்.
கஸ்பாபேட்டை செங்கோடம்பாளையம் வீதியில் ஜோதி என்பவருக்கு சொந்தமான வைக்கோல் போர் கட்டில் தீ விபத்து ஏற்பட்டது. இதன் அருகில் வைக்கோல் குவியலாக வைத்திருந்தனர். அதிலும் தீப்பிடித்து எரிந்தது. 50 வைக்கோல் போர் கட்டுக்கள் தீக்கிரையாகின. தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை. 1.30 மணிக்கு ஈரோடு தீயணைப்பு துறையினர் அங்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். 4 மணிக்கு தீ முற்றிலுமாக அணைக்கப்பட்டது.
ஈரோடு மேளாகவுண்டன்பாளையத்தில் சதீஷ் குமார் என்பவருக்கு சொந்தமான 2 ஏக்கர் காய்ந்த புல்லில் தீப்பிடித்து எரிந்தது. தகவல் அறிந்த ஈரோடு தீயணைப்பு துறையினர் 3.30 மணிக்கு அங்கு சென்றனர். 4.15 மணிக்கு தீயை முற்றிலுமாக அணைத்தனர். தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை. தீப்பொறி காற்றில் பறந்து காய்ந்த புற்களில் தீப்பிடித்து இருக்கலாம் என கூறப்படுகிறது.
