*நடவடிக்கை எடுக்க மக்கள் எதிர்பார்ப்பு
கடவூர் : தரகம்பட்டி அருகே தென்னிலை ஊராட்சி கோட்டகாரன்பட்டி காவிரி கூட்டுக்குடிநீர் இடைநிலை நீரேற்றும் நிலையம் மற்றும் நெடுஞ்சாலைத்துறையின் கீழ் உள்ள தரகம்பட்டி-குளித்தலை மெயின் ரோட்டில் எதிர் வரும் காலங்களில் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டு உள்ள தனியார் காற்றாலையை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கரூர் மாவட்டம் கடவூர் வட்டாரத்தில் உள்ள தென்னிலை ஊராட்சி கோட்டக்காரன்பட்டியில் 5 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட திண்டுக்கல் மாவட்டம் நத்தம் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் இடைநிலை நீர்ரேற்றும் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
தரகம்பட்டி-குளித்தலை மெயின் ரோட்டின் அருகே அமைக்கப்பட்டு உள்ள இந்த இடைநிலை நீர்ரேற்றும் நிலையத்தில் இருந்து திண்டுக்கல் மாவட்டம் நத்தம், நிலக்கோட்டை மற்றும் அம்மையநாயக்கனூர் ஆகிய 3 பேரூராட்சி பகுதிகள் மற்றும் நத்தம், சானார்பட்டி, ஆத்தூர், வத்தலக்குண்டு, நிலக்கேட்டை, திண்டுக்கல், ரெட்டியார்சத்திரம், ஒட்டன்சத்திரம், வேடசந்தூர், வடமதுரை, குஜிலியம்பாறை ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 1276 கிராமங்களுக்கு காவிரி நீர் செல்கிறது.
இந்த காவிரி ஆற்றின் நீராதாரமாக கொண்ட நத்தம் கூட்டுக்குடிநீர் திட்டமானது கடந்த 2015-2018ஆம் ஆண்டு ரூ.636 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் 9 லட்சத்து 45 ஆயிரம் பொதுமக்கள் பயன் பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் தென்னிலை ஊராட்சி கோட்டக்காரன்பட்டியில் அமைக்கப்பட்டு உள்ள 5 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட திண்டுக்கல் மாவட்டம் நத்தம் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் இடைநிலை நீர்ரேற்றும் நிலையம் மற்றும் தரகம்பட்டி-குளித்தலை மெயின்ரோட்டின் மிக அருகாமையில் தனியாருக்கு சொந்தமான காற்றாலை அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த காற்றாலை அமைக்கும் போதே இடைநிலை நீர்ரேற்றும் நிலையம் மற்றும் நெடுஞசாலைத்துறையின் கீழ் உள்ள குளித்தலை-தரகம்பட்டி மெயின் ரோட்டின் மிக அருகாமையில் காற்றாலை அமைகப்பட்டுள்ளதால் எதிர்காலத்தில் ஆபத்தை ஏற்படுத்தும் என்று சிலர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
ஆனாலும் அதனை பொருட்படுத்தாமல் சில இடைத்தரகர்கள் மூலம் பல லட்சம் அளவிலான பணங்களை பெற்றுக்கொண்டு, ஆபத்தை ஏற்படுத்தும் என்று உணராமல் தனியார் காற்றாலை நிறுவனத்திற்கு ஆதரவாக செயல்பட்டு உள்ளதாக கூறுகின்றனர்.தற்போது கடவூர் வட்டாத்தில் அமைக்கப்பட்டு வரும் காற்றாலைகளில், ஒவ்வொரு காற்றாலைக்கும் உள்ள இடைவெளிகள் விதிமுறைகளுக்கு உட்பட்ட இருக்க வேண்டும் .
ஆனால் கோட்டக்காரன்பட்டியில் அமைக்கப்பட்டு உள்ள 5 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட இடைநிலை நீர்ரேற்றும் நிலையம் மற்றும் குளித்தலை-தரகம்பட்டி மெயின் ரோட்டில் இருந்து சுமார் 300 மீட்டர் இடைவெளியில் காற்றாலை அமைக்கப்பட்டு உள்ளது.
இங்கு அமைக்கப்பட்டு உள்ள தனியார் காற்றாலையின் தூன் மற்றும் அதன் மீது பொருத்தபடும் (விசையாழி கத்திகள்) விசிறிகள் மற்றும் ஜெனரேட்டர் ஆகியவை மொத்தம் சுமார் 500 டன்னிற்கும் மேல் எடை இருக்கும் என்று தெரிவிக்கின்றனர். இதேபோல் கோட்டக்காரன்பட்டியில் உள்ள 5 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட இடைநிலை நீர்ரேற்றும் நிலையமும் சேதம் ஏற்பட்டால் பொதுமக்களின் குடிநீர் ஆதாரம் பாதிக்கப்படும்.
ஆகவே தனியார் காற்றாலை விதிமுறைகளுக்கு உட்பட்டு அமைக்கப்பட்டு உள்ளதா?, எதிர்காலங்களில் தனியார் காற்றாலை மூலம் விபத்து ஏற்பட்டால் பாதிப்புகளை ஏற்படுத்துமா?, என்று மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து தனியார் காற்றாலையை அகற்ற வேண்டும் என்று இப்பகுதியினர் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
மிகப்பெரிய உயிரிழப்பை ஏற்படுத்தும்
தனியாருக்கு சொந்தமான காற்றாலையில் அதிகமான காற்று விசையினாலும், அதிகமான வெப்பம் ஏற்படுவதன் மூலமாகவும், எதிர் வரும் காலங்களில் காற்றாலை முறிந்து கீழே விழும் சூழல் உள்ளது. தனியார் காற்றாலையின் மூலம் விபத்து ஏற்படும் சூழல் ஏற்பட்டால் தரகம்பட்டி-குளித்தலை மெயின் ரோட்டில் செல்லும் வாகனங்களுக்கும், பொதுமக்களுக்கும் மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தும்.
