*வேறு இடத்தில் அமைக்க கோரிக்கை
மங்கலம்பேட்டை : மங்கலம்பேட்டை பேரூராட்சி எல்லைக்குட்பட்ட பில்லூர் கிராமத்திற்கு செல்லும் சாலையின் முடக்கு பகுதி சாலையோரத்தில் திறந்த வெளியில் மாடுகளை வெட்டி, மாட்டிறைச்சியை விற்பனை செய்து வருகின்றனர்.
இது சுகாதார சீர் கேட்டை ஏற்படுத்தி வருகிறது. எனவே திறந்த வெளியில் மாடுகள் வெட்டப்படுவதற்கு அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்து வேறு இடத்தில் இறைச்சி கடையை நடத்த கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து தமிழ்நாடு விஸ்வகர்மா பாதுகாப்பு இளைஞர்கள் கூட்டமைப்பு மாநில தலைவர் மணிகண்டன், சமூக ஆர்வலர் பொறியாளர் தர்மா கூறுகையில், விருத்தாசலம்-உளுந்தூர்பேட்டை நெடுஞ்சாலையானது அரசு மற்றும் தனியார் பேருந்துகள், பள்ளி வாகனங்கள் மற்றும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பயன்படுத்தி வரும் பிரதான சாலையாகும்.
இந்த சாலையோரத்தில் திறந்த வெளியில் இறைச்சிக்காக மாடுகளை வெட்டி மாட்டிறைச்சியை விற்பனை செய்கின்றனர். திறந்த வெளியில் வைத்து மாடுகளை வெட்டுவதால், அந்த வழியாக செல்லும் பெண்கள், குழந்தைகள் அச்சமடைகின்றனர்.
மேலும் பைக்கில், பேருந்து உள்ளிட்ட வாகனம் மற்றும் நடந்து செல்பவர்கள் என அனைவருக்கும் அருவருப்பை உண்டாக்குவதாக உள்ளது. மாடுகளின் ரத்தம் மற்றும் அவற்றின் கழிவுகளை முறையாக அகற்றாமல் அப்படியே கிடப்பதால் கடும் துர்நாற்றமும் வீசுகிறது. இதனால் பொதுமக்கள் தினமும் கடும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.
சாலையோரத்தில் கிடக்கும் அந்த கழிவுகளால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன், அப்பகுதி முழுவதும் தொற்று நோய் ஏற்படும் நிலையில் உள்ளது. மேலும் இந்த கழிவுகளுக்கு தெருநாய்கள் கூட்டமாக அப்பகுதி முழுவதும் சுற்றித்திரிகிறது. இதனால் இதன் வழியாக செல்ல பள்ளி மாணவர்கள், முதியவர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.
எனவே உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் இதுபோன்ற திறந்தவெளியில் போதுமான பாதுகாப்பு இல்லாமல் விற்பனை செய்யப்படும் இறைச்சிகளை அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும். மேலும் பொதுமக்கள் புழங்கும் இடத்திலும், பொது சுகாதாரம் பாதிக்கும் இடத்திலும் இந்த இறைச்சி கடைகளை வைக்க தடை விதித்து, இறைச்சி கடைகளுக்கு தகுந்த இடம் ஒதுக்கி தர வேண்டும், என்றார்.
