திருவனந்தபுரம்: பயிற்சிக்கு வந்த 6 மாணவிகளை மிரட்டி பலாத்காரம் செய்த கேரள கிரிக்கெட் சங்க முன்னாள் பயிற்சியாளருக்கு 4 வழக்குகளில் 127 ஆண்டு கடுங்காவல் சிறையும், மொத்தம் ரூ. 2.23 லட்சம் அபராதமும் திருவனந்தபுரம் வள்ளக்கடவு பகுதியைச் சேர்ந்தவர் மனு (40). இவர் கேரள கிரிக்கெட் சங்க பெண்கள் அணி பயிற்சியாளராக இருந்து வந்தார்.
இந்நிலையில் கடந்த 2018ம் ஆண்டு பயிற்சிக்கு வந்த 6 மாணவிகளை இவர் பலாத்காரம் செய்தார். மேலும் அந்த மாணவிகளை அவர் ஆபாச வீடியோ மற்றும் போட்டோவும் எடுத்துள்ளார். இது தொடர்பாக 6 வழக்குகள் பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர். இந்த வழக்குகள் மீதான விசாரணை திருவனந்தபுரம் அதிவிரைவு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. 4 வழக்குகளில் சமீபத்தில் விசாரணை முடிவடைந்தது. இதில் முதல் வழக்கில் கடந்த மாதம் மனுவுக்கு 16 வருடம் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த 25ம் தேதி இரண்டாவது வழக்கில் 35 வருடம் கடுங்காவல் சிறை விதிக்கப்பட்டது. கடந்த 3 தினங்களுக்கு முன் 3வது வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது.
இதில் மனுவுக்கு 48 வருடம் கடுங்காவல் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இந்நிலையில் 4வது வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த வழக்கில் மனுவுக்கு 28 வருடம் கடுங்காவல் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. முதல் 3 வழக்குகளில் தண்டனையை அனுபவித்த பின்னர்தான் 4வது வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்று நீதிபதி அஞ்சு மீரா பிர்லா தன்னுடைய உத்தரவில் குறிப்பிட்டுள்ளார். இந்த 4 வழக்குகளிலும் சேர்த்து மனுவுக்கு 127 வருடம் கடுங்காவல் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
