புதுடெல்லி: பெட்ரோல், டீசல் விற்பனை மீதான கட்டுப்பாடுகள் நாளை முதல் நீக்கப்படும் என்று ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. ஈரான் போரை தொடர்ந்து எரிபொருள் விநியோகத்தை நிர்வகிக்க வணிக மற்றும் தொழில்முறை நுகர்வோருக்கு பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனையில் ஜூன் 12 முதல் ஒன்றிய அரசு கட்டுப்பாடு விதித்து இருந்தது. அந்த உத்தரவு அடிப்படையில் ஒரு வாகனத்திற்கு ஒரு நாளைக்கு 200 லிட்டர் டீசல் மட்டுமே விற்கப்பட வேண்டும் என்றும், தொழில், வணிக மற்றும் நிறுவன நுகர்வோர் சில்லறை விற்பனை நிலையங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் வாங்குவதைத் தடை செய்தும் இருந்தது.
உலகளாவிய விநியோகத் தடைகளுக்கு மத்தியில் உள்ளூர் அளவில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்படுவதைத் தடுப்பதற்காகவே இந்தக் கட்டுப்பாடுகள் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தன. தற்போது ஈரான் போர் நிறுத்தப்பட்டு இருப்பதால் நமது நாட்டில் பெட்ரோலியப் பொருட்களின் தற்போதைய விநியோக நிலைமையை ஆய்வு செய்த பிறகு, ஜூன் 12ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட உத்தரவைத் தொடர்ந்து அமல்படுத்துவது பொது நலன் கருதி இனி அவசியமில்லை என்று ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது.
எனவே மோட்டார் ஸ்பிரிட் மற்றும் அதிவேக டீசல் (சில்லறை விற்பனை நிலையங்கள் மூலம் விநியோகத்தின் தற்காலிக ஒழுங்குமுறை) ஆணை, 2026 இன் பிரிவு 3-ன் கீழ் வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி, ஒன்றிய அரசு தனது ஜூன் 12 தேதியிட்ட உத்தரவை ஜூலை 1 முதல் திரும்பப் பெறுகிறது என்று தெரிவித்து உள்ளது. இந்த உத்தரவு ஜூலை 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
