சபரிமலையில் இருந்து கிலோக்கணக்கில் தங்கம் கொள்ளை: சிறப்பு புலனாய்வுக் குழு கேரள உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல்

 

திருவனந்தபுரம்: சபரிமலை கோயிலின் மேற்கூரை, பக்கச்சுவர்கள், கதவு நிலை, படிகள் மற்றும் கோயிலின் முன்புறமுள்ள 2 துவாரபாலகர் சிலைகளில் தங்கத் தகடுகள் பதிக்கப்பட்டன. சபரிமலை கோயிலில் எந்தப் பணிகள் நடைபெறுவதாக இருந்தாலும் உயர்நீதிமன்றத்தின் முன் அனுமதி பெறவேண்டும். இந்நிலையில் கடந்த ஆண்டு துவாரபாலகர் சிலைகளில் இருந்த தங்கத் தகடுகள் தங்க முலாம் பூசுவதற்காக கூறி சென்னை அம்பத்தூரில் உள்ள நிறுவனத்திற்கு உயர்நீதிமன்றத்தின் அனுமதியில்லாமல் கொண்டு செல்லப்பட்டன. இதுகுறித்து சபரிமலை சிறப்பு ஆணையாளர் ஜெயகிருஷ்ணன் உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து விசாரணை நடத்த கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த விசாரணையில், கடந்த 2019ம் ஆண்டிலும் இதேபோல தங்கத் தகடுகள் அம்பத்தூருக்கு கொண்டு செல்லப்பட்டது என்றும், அவற்றை திரும்பக் கொண்டு வந்த போது தங்கத்தில் பெருமளவு எடை குறைந்திருந்தது என்றும் தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து இந்த திருட்டு குறித்து விசாரிக்க கேரள உயர்நீதிமன்றம் ஒரு சிறப்பு புலனாய்வுக் குழுவை நியமித்தது. தங்கம் திருட்டு தொடர்பாக இந்த சிறப்பு புலனாய்வுக் குழு 2 வழக்குகளை பதிவு செய்து விசாரணை நடத்தியது.

இதில் சபரிமலை மூத்த தந்திரி கண்டரர் ராஜீவரர், திருவிதாங்கூர் தேவசம் போர்டின் 2 முன்னாள் தலைவர்கள், முன்னாள் உறுப்பினர்கள், அதிகாரிகள், தங்கத் தகடுகளை சென்னைக்கு கொண்டு சென்ற உண்ணிகிருஷ்ணன் போத்தி உள்பட 13 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக சிறப்பு புலனாய்வுக் குழு நேற்று கேரள உயர்நீதிமன்றத்தில் ஒரு அறிக்கை தாக்கல் செய்தது.

அதில் கூறப்பட்டுள்ள விவரங்கள் வருமாறு: 2019ல் நடந்த மிகப்பெரிய கொள்ளையை மறைப்பதற்காகத் தான் கடந்த ஆண்டும் தங்கத் தகடுகள் சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டன. 2019ல் தங்கத் தகடுகள் சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டு அம்பத்தூரில் உள்ள நிறுவனத்தில் வைத்து ‘ஸ்ட்ரிப்பிங் சொல்யூஷன்’ முறையில் பெருமளவு தங்கம் பிரித்தெடுக்கப்பட்டது. இதன்பிறகு மிகக் குறைந்த அளவு, தரம் இல்லாத தங்கம் அதில் சேர்க்கப்பட்டது.

தங்கமுலாம் பூசியதற்கு 40 வருட உத்தரவாதம் இருப்பதாக அப்போது கூறப்பட்டது. ஆனால் ஒரு சில வருடங்களிலேயே அந்த தங்கத் தகடுகளில் இருந்து செம்பு வெளியே தெரியத் தொடங்கியது. இதனால் தாங்கள் சிக்கிவிடுவோமோ என பயந்த இந்த திருட்டில் ஈடுபட்டவர்கள் மீண்டும் சதித்திட்டம் தீட்டி கடந்த ஆண்டும் தங்கமுலாம் பூசுவதற்கு என்று கூறி அந்த தகடுகளை சென்னைக்கு கொண்டு சென்றுள்ளனர். இத்தகைய செயல் மூலம் சபரிமலையில் இருந்து கிலோ கணக்கில் தங்கம் திருடப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்பு புலனாய்வுக் குழு நேற்று தாக்கல் செய்த அறிக்கையில், கடந்த முறை திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவராக இருந்த பிரசாந்த், உண்ணிகிருஷ்ணன் போத்தி, தந்திரி கண்டரர் ராஜீவரர், முன்னாள் தேவசம்போர்டு உறுப்பினர் அஜிகுமார், தேவசம்போர்டு அதிகாரிகள் ரெஜிலால், முராரி பாபு மற்றும் அம்பத்தூர் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி பங்கஜ் பண்டாரி ஆகியோர் குற்றவாளிகள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: