* 1ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை அமல்
* கடைப்பிடிக்காவிட்டால் அங்கீகாரம் ரத்து
மும்பை: மகாராஷ்டிர மாநிலத்தில் அனைத்து கல்வி வாரியங்களின் கீழ் செயல்படும், அனைத்து மொழி வழிப் பள்ளிகளிலும் 1ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை ஒரு பாடப்பிரிவாக மராத்தி மொழியை கற்பிப்பதும், அந்தப் பாடத்திற்கு கட்டாயத் தேர்வு நடத்துவதும் சட்டப்பூர்வமாக கட்டாயமாக்கப்பட்டுள்ளது.மகாராஷ்டிரா சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டதொடர் நடைபெற்று வருகிறது.
நேற்று சட்டப்பேரவையின் கேள்வி நேரத்தில் நடைபெற்ற விவாதத்துக்கு பதிலளித்த அமைச்சர் தாதா புசே, ‘‘ மகாராஷ்டிர பள்ளிகளில் மராத்தி மொழியை கட்டாயமாக கற்பித்தல் மற்றும் கற்றல் சட்டம்-2020 அடிப்படையில் மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து கல்வி வாரியங்களின் பள்ளிகளிலும், அனைத்து மொழி வழிப் பள்ளிகளிலும் 1ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை மராத்தி மொழிப்பாடம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மராத்தி மொழியை கற்பிப்பதற்காக தகுதியான ஆசிரியர்களை ஒவ்வொரு பள்ளியும் கட்டாயம் நியமிக்க வேண்டும்.
இந்த விதிமுறைகள் முறையாக அமல்படுத்தப்படுகிறதா என்பதை அரசு அதிகாரிகள் வழக்கமான ஆய்வுகள் மூலம் கண்காணிப்பார்கள்.ஒரு பள்ளி சட்டத்தின் விதிமுறைகளைப் பின்பற்றவில்லை என்றால், அந்தப் பள்ளிக்கு முதலில் நோட்டீஸ் வழங்கப்படும். அதன் பின்னரும் மராத்தி மொழியை கற்பிக்கத் தவறினால் அதிகபட்சமாக ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும். அதற்குப் பிறகும் விதிமுறைகளை அமல்படுத்த மறுத்தால், 2026 ஏப்ரல் 17ம் தேதி வெளியிடப்பட்ட அரசாணையின் அடிப்படையில் அந்தப் பள்ளியின் அங்கீகாரமே ரத்து செய்யப்படும், என்று எச்சரித்தார்.
