அமைதியாக இருக்கும் மாஜி அமைச்சர்களால் கலங்கும் தேனிக்காரர் பற்றி சொல்கிறார் wiki யானந்தா

‘‘சே லம்காரர் நடத்திய மாநாட்டால் அப்செட்டில் அடங்கி ஒடுங்கி இருக்கும் இலை கட்சியின் மாஜி அமைச்சர்கள் யாரு…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘இலை கட்சியில் தனது பலத்தை நிரூபிக்க தேனிக்காரர் மலைக்கோட்டை மாநகரில் மாநாட்டை நடத்தி பணத்தை கொட்டினாரு… அதையெல்லாம் காலியாக்கும் வகையில் சேலம்காரர் கூட்டம் கூட்டமாக வேன், பஸ், கார் என்று ஆட்களுக்கு ஏற்றவாறு கரன்சிகளை கொட்டி, கூட்டம் கூட்டமாக அழைத்து வந்துட்டாரு… இந்த மாநாட்டு காட்சிகளை பார்த்த தேனிகாரர், குக்கர் தலைமை மூன்று நாட்களுக்கு தூங்க முடியாமல் தவிச்சுட்டாங்க. இந்த மாநாட்டுக்கு பின்னர் கட்சியில் சேலம்காரர் கை ஓங்கியதால் அப்செட்டில் இருந்த தேனிக்காரர் பகையை மறந்து குக்கர் தலைவரை நேரில் சந்தித்து சரணடைந்தார். இலை கட்சியில் இருந்து பிரிந்து ஆரம்பத்தில் சுறுசுறுப்பாக இருந்த தேனிக்காரர் அணியினர், சேலம்காரர் நடத்திய மாநாட்டில் கூடிய கூட்டத்தை பார்த்து தேனிக்காரர் அதிர்ச்சியில் நாற்காலியில் உட்கார்ந்துவிட்டதாக சொல்றாங்க. அவரை தொடரும் ெதாண்டர்களும் மாநாட்டு கூட்டத்தை பார்த்து தற்போது அவர்களுக்கு தூங்கும் போது கூட அணி தாவும் காட்சிகள்தான் வருகிறதாம். தொண்டர்கள், நிர்வாகிகள் இது குறித்து பேசினாலும் அதிர்ச்சியில் இருக்கும் தேனிக்காரர் பதில் கூறாமல் மவுனமாகவே இருந்து வருகிறாராம். குறிப்பாக, கடலோரம், மனுநீதிசோழன், நெற்களஞ்சியம், மலைக்கோட்டை மாநகர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களை சேர்ந்த தேனிக்காரரின் நெருங்கிய மாஜி அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகள் கூட சைலன்டாக இருந்து வர்றாங்க. இந்த அணியில் தலைவர்களால் உறுதியாக ஒரு முடிவு கூட எடுக்க முடியாமல் தவித்து வருவதால், தொண்டர்களை கண்டு எதிர்கால அரசியல் குழப்பத்தில் இருக்காங்களாம். அரசியல் கொள்கை படி ஒருவருக்கு அரசியலில் குழப்பம் வந்தால் அணி அல்லது கட்சி தாவும் படலம் நிச்சயமாக நடக்கும் என்பது எழுதப்படாத விதியாக உள்ளது. இந்த விதி தன் அணியை பாதித்து விடுமோ என்று தேனிக்காரர் அச்சத்திலும் குழப்பத்திலும் இருக்காராம். இன்னும் சிலர் சேலம்காரர் அணிக்கு திரும்பி விடலாமா, அங்கு சென்றால் பதவி கூட வேண்டாம், மரியாதை இருந்தால் போதும் என புலம்புகிறார்களாம். இந்த டாப்பிக் தான் தற்போது டெல்டா மாவட்டத்தில் பெரிய அளவிலான பேச்சாக இருக்கும்…’’ என்றார் விக்கியானந்தா.

‘‘ வயலில் நெல்லுக்கு பதிலாக கரன்சி வளர்ந்து அக்ரி ஜோடியை உச்சத்துக்கு கொண்டு போனதை சொல்லுங்க…’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘மாங்கனி டிஸ்டிரிக்டில் அசிஸ்டென்ட் அக்ரி ஆபீசராக இருக்கும் கணவனும், மனைவியும் சேர்ந்து கல்லா கட்டுவதாக சர்ச்சை கிளம்பியிருக்காம். இந்த டிஸ்டிரிக்டில் பனைமரங்கள் நிறைந்த ஊரில் கணவனும், வீரமான ஊரில் மனைவியும் ஆபீசர்களாக இருக்காங்க. கணவர் வேலைக்கே சரியாக வருவதில்லை என்று அவரது ஆபீசில் கம்ப்ளைன்ட். மனைவியோ வேலைக்கு வந்தாலும் செம குடைச்சல் என்று சர்ச்சை. ரெண்டு பேரும் சில திட்டங்களுக்கு போட்டோ மட்டும் எடுத்து வச்சுகிட்டு அதற்கான அமவுண்டை ரகசியமாக சுருட்டுறாங்களாம். இப்ப ஹில்ஸ் பகுதியில் எஸ்ேடட் வாங்கி போட்டிருக்காங்க. ஒர்க்கை விட எஸ்டேட்டை பார்ப்பதுதான் ரெண்டு பேருக்கும் பெரிய வேலையாக இருக்காம். வருகைப்பதிவேடு இல்லாதது இவங்க ரெண்டு பேருக்கும் பெரும் சாதகமாம். அது சரி இந்த பூனைகளுக்கு யார் மணிகட்டுவது என்ற பேச்சு பரவலான நிலையில், இப்போது மேலிடம் வரைக்கும் கம்ப்ளைன்ட் பறந்திருக்காம்… இந்த தகவல் அக்ரி ஜோடிக்கு எட்டியதும் தவறாமல் ஆபிசுக்கு வர்றாங்களாம்… கரன்சியை சுருட்டுவது வழக்கம்போல நடக்குதாம்…’’ என்றார் விக்கியானந்தா.

‘‘வாங்கின கையும், ஆடிய காலும் சும்மா இருக்குமா என்பது யாருக்கு சரியாக பொருந்துது…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘கோவை வடக்கு பகுதியில் உள்ள 3 தாசில்தார் ஆபீசுகள் ரொம்பவே பரபரப்பாக இருக்காம். கரன்சி மழையும் கொட்டோ… கொட்டு….ன்னு கொட்டுதாம். காரணம், இந்த 3 தாசில்தார் ஆபீஸ்களில் புரோக்கர்கள் நடமாட்டம் அதிகமாம். ஒவ்வொரு சான்றிதழ் விநியோகம் செய்ய, ஒவ்வொரு ‘ரேட் பிக்ஸ்’ செய்துகொண்டு, அதை கொடுத்தால்தான் விண்ணப்பம் நகரும் என வெளிப்படையாக கூறி சொல்றாங்க. வேறு வழியின்றி, விண்ணப்பதாரர்கள், கேட்ட பணத்தை கொடுத்துவிட்டு சப்தம் இல்லாமல் சான்றிதழ்களை, வாங்கிவிட்டு போறாங்களாம். இதில், பெரும்பகுதியை புரோக்கர்கள் அமுக்கிவிட்டு, மிச்சம் மீதியை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் சொருகி விடுகின்றனர். இந்த விவகாரம் மாவட்ட உயரதிகாரி காதுக்கு போச்சம். இதையடுத்து, மாவட்ட வருவாய் அலுவலர், 3 தாசில்தார்களையும் நேரில் அழைத்து, லெப்ட்… ரைட்… வாங்கிட்டாராம். இதனால், 3 பேரும் முகத்தை மறைத்துக்கொண்டு, தப்பி ஓடிட்டாங்களாம். அதே வேகத்தில், அந்தந்த தாசில்தார் ஆபீசில் தனித்தனியாக மீட்டிங் போட்டு, புரோக்கர்களுக்கு ‘செக்’ வைச்சு இருக்காங்களாம். வாங்கின கையும், ஆடிய காலும் சும்மா இருக்குமா… அது மீண்டும் தலையெடுக்கும் என்கிறார்கள் புரோக்கர்கள்…’’ என்றார் விக்கியானந்தா.

‘‘என்ன ஆக்கிரமிப்பு, யாருக்கு யார் துணை போறாங்க…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘வெயிலூர்னாலே வெயிலுக்கும் ஜெயிலுக்கும் பெயர்போன ஊர்னு சொல்வாங்க. இப்ப ஆக்கிரமிப்புகளுக்கு பெயர்போன ஊராக மாறிகிட்டு வருதுன்னா, யாரும் மறுக்க முடியாது. இப்படி ஆக்கிரமிப்புகள் பிடியில சிக்கிக்கிட்டிருந்த காகிதத்துல தொடங்கி பட்டறையில முடியுற மலையும், மலை அடிவாரமும் வனத்துறை, நெடுஞ்சாலைத்துறை, வருவாய்த்துறை, மாநகராட்சின்னு எந்த துறையும் அந்த பட்டறையில முடியுற ஏரியாவுல இருக்குற இடம், எங்க துறைக்கு சொந்தமானதுன்னு உரிமை கோராம தட்டிகழிச்சு வந்தாங்க. ஒருவழியாக இந்த ஆக்கிரமிப்பு இடம் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமானதுன்னும், அதுக்கு அடுத்த கட்டமாக மலை மேல உள்ள இடம் வருவாய்த்துறைக்கு சொந்தமானதுன்னும் தெரியவந்துச்சு.

அதன்பிறகு கலெக்டரோட அதிரடி நடவடிக்கையால, நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்துல இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றிவர்றாங்க. அதேபோல வருவாய்த்துறை, வனத்துறைனு அவங்களுக்கு சொந்தமான இடத்துல இருக்குற ஆக்கிரமிப்புகளையும் சூட்டோட சூடா இப்பவே அகற்றம் செய்யணும்னு கோரிக்கை எழுந்திருக்குது. அதேபோல, வெயிலூர் சிட்டியிலயும், காட்டுப்பாடியிலயும் இருக்குற ஸ்டேட் சாலைகள் அதிகாரிகளோட ஆசியில பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்புல, இடத்துக்கு ஏற்றமாதிரி சாலைகள் வளைந்து நெளிந்து போகுதாம்…’’என்றார் விக்கியானந்தா.

The post அமைதியாக இருக்கும் மாஜி அமைச்சர்களால் கலங்கும் தேனிக்காரர் பற்றி சொல்கிறார் wiki யானந்தா appeared first on Dinakaran.

Related Stories: