இந்நிலையில்உச்ச நீதிமன்றத்தில் மொத்தம் மூன்று பொதுநல மனுக்கள் கடந்த மார்ச் மாதம் தாக்கல் செய்யப்பட்டது. அதில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்துடன் ஒப்புகைச் சீட்டு இயந்திரத்தையும் நூறு சதவீதம் சரிபார்க்க உத்தரவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் திபங்கர் தத்தா ஆகிய இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு, இந்த விவகாரத்தில் இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் தொழில்நுட்ப அதிகாரிகளின் விளக்கத்தை ஏற்பதாக தெரிவித்து வழக்கை தள்ளுபடி செய்து கடந்த ஏப்ரல் 26ம் தேதி தீர்ப்பளித்தனர்.
இதையடுத்து இந்த உத்தரவில் பிழை இருபதால் அதனை மறுஆய்வு செய்ய வேண்டும் என்று மனுதாரர்களின் ஒருவரான அருண் குமார் அகர்வால் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனுவை தாக்கல் செய்திருந்தார். இந்த மனு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் திபங்கர் தத்தா ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த விவகாரத்தை பொறுத்தவரை முன்னதாக விரிவாக விசாரித்து தான் தெளிவான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அதனால் வழக்கில் முன்னதாக அளிக்கப்பட்ட தீர்ப்பில் எந்தவித ஆய்வும் செய்ய தேவையில்லை. அதனால் சீராய்வு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்கிறது. மேலும் இந்த விவகாரத்தை பொறுத்தவரை ஜனநாயகத்தை வலுப்படுத்தும் நம்பிக்கை மற்றும் ஒத்துழைப்பு கலாசாரத்தை வளர்க்க வேண்டியுள்ளது. அதனை மனுதாரர் கருத்தில் கொள்ள வேண்டும் என்று தெரிவித்த நீதிபதிகள் மறுஆய்வு தொடர்பான வழக்கை முடித்து வைத்தனர்.
The post விவிபேட் தொடர்பான தீர்ப்பை மறுஆய்வு செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு appeared first on Dinakaran.