பெண்களுக்கு ஆண் டெய்லர்கள் அளவு எடுக்கக்கூடாது: உபி அரசுக்கு மாநில மகளிர் ஆணையம் பரிந்துரை

லக்னோ: பாலியல் துன்புறுத்தல்களை தடுக்க டெய்லர் கடைகளில் பெண்களுக்கு ஆண்கள் அளவு எடுக்கக்கூடாது என்றும் உடற்பயிற்சி கூடங்களில் பெண்களுக்கு ஆண்கள் பயிற்சி அளிக்கக்கூடாது என்பது உள்பட பல்வேறு பரிந்துரைகளை உபி மகளிர் ஆணையம் மாநில அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. உபி மாநில மகளிர் ஆணைய தலைவர் பபிதா சவுகான் தலைமையில் கடந்த 28ம் தேதி ஆணைய கூட்டம் நடந்தது. பாலியல் கொடுமைகளில் இருந்து பெண்களுக்கு பாதுகாப்பு அளிப்பது தொடர்பாக கூட்டத்தில் ஆலோசனை நடத்தி பல பரிந்துரைகள் அரசுக்கு அளிக்கப்பட்டுள்ளது.

அதன் முடிவுகள் இப்போது வெளியாகியுள்ளன. அதில், பெண்களுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்த தையல் கடைகளில் பெண்களுக்கு ஆண் டெய்லர்கள் அளவு எடுக்கக்கூடாது. உடற்பயிற்சி அல்லது யோகா மையங்களில் பெண்களுக்கு ஆண் பயிற்சியாளர்களை அமர்த்தக்கூடாது.முடி திருத்தும் கடைகளில் பெண்களுக்கு பெண்கள் தான் முடி திருத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளது.

மகளிர் ஆணைய தலைவர் பபிதா சவுகான் கூறுகையில்,‘‘டெய்லர் கடைகளில் பெரும்பாலும் ஆண்கள் தான் டெய்லர்களாக உள்ளனர். ஆண் டெய்லர்கள் அளவு எடுக்கும் போது பெண்களுக்கு பாலியல் தொல்லை அளிப்பதாக புகார்கள் வருகின்றன. உடற்பயிற்சி கூடங்கள், யோகா மையங்களில் ஆண் பயிற்சியாளர்கள் பெண்களை தவறான நோக்கத்துடன் தொடுகின்றனர். இதை கருத்தில் கொண்டு தான் பெண்களின் பாதுகாப்பு கருதி இந்த பரிந்துரைகளை மாநில அரசுக்கு அளித்துள்ளோம்.

இதற்காக பயிற்சி பெற்ற பெண்களை அந்த இடங்களில் பணியில் அமர்த்த வேண்டும். இது சில காலம் பிடிக்கும் என்றாலும் இதன் மூலம் பெண்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்’’ என்றார். மகளிர் ஆணைய உறுப்பினர் ஹிமானி அகர்வால், பெண்களின் பாதுகாப்புக்கு டெய்லர் கடைகள், உடற்பயிற்சி கூடங்கள், சலூன்களில் சிசிடிவி பொருத்தப்பட வேண்டும். இந்த பரிந்துரைகளை சட்டமாக கொண்டு வருவதற்கு ஆணையம் பரிந்துரைக்க வேண்டும் என்றார்.

The post பெண்களுக்கு ஆண் டெய்லர்கள் அளவு எடுக்கக்கூடாது: உபி அரசுக்கு மாநில மகளிர் ஆணையம் பரிந்துரை appeared first on Dinakaran.

Related Stories: