உளவு பார்த்த வழக்கில் கைதான நிலையில் துப்பாக்கி ஏந்திய 5 பாதுகாவலர்களுடன் பாகிஸ்தானை சுற்றிவந்த பெண் யூடியூபர்: ஸ்காட்லாந்து நபரின் வீடியோவால் பரபரப்பு


புதுடெல்லி: உளவு பார்த்த வழக்கில் கைதான நிலையில் துப்பாக்கி ஏந்திய 5 பாதுகாவலர்களுடன் பாகிஸ்தானை சுற்றிவந்த பெண் யூடியூபர் குறித்த வீடியோவை ஸ்காட்லாந்து யூடியூபர் வெளியிட்டுள்ளார். அரியானா மாநிலத்தைச் சேர்ந்த யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா என்பவர், கடந்த 2023ம் ஆண்டு முதல் இந்தியாவில் இருக்கும் பாகிஸ்தான் தூதரக அதிகாரி எஹ்சான்-உர்-ரஹீம் (டேனிஷ்) என்பவருடன் தொடர்பில் இருந்ததாகவும், பாகிஸ்தான் உளவுத்துறையினருக்கு முக்கியமான தகவல்களை அனுப்பியதாகவும் உளவுத்துறை அளித்த தகவல்களின் அடிப்படையில் காவல்துறை வழக்கு பதிவு செய்தது.

அவரது செல்போன்கள் மற்றும் மடிக்கணினி ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளன. ஜோதியின் பாகிஸ்தான் மற்றும் வெளிநாட்டு பயணங்கள், நிதி பரிவர்த்தனைகள் மற்றும் பாகிஸ்தானில் அவர் சந்தித்த உயர்மட்ட அதிகாரிகள் குறித்து தேசிய புலனாய்வு முகமை மற்றும் உளவுத்துறை விசாரித்து வருகின்றன. தற்போது போலீஸ் கஸ்டடியில் இருக்கும் ஜோதி மல்ஹோத்ரா குறித்து பரபரப்பு தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. இவர் பாகிஸ்தானின் லாகூரில் உள்ள அனார்கலி பஜாரில், ஆறு துப்பாக்கி ஏந்திய நபர்களுடன் இருந்ததை ஸ்காட்லாந்து யூடியூபர் காலும் மில் என்பவர் தனது வீடியோவில் பதிவு செய்துள்ளார்.

அவரது பதிவில், ‘ஜோதி மல்ஹோத்ராவை சுற்றிலும் ஏகே-47 துப்பாக்கிகளுடன் ஆறு பாதுகாவலர்கள் உள்ளனர். இந்தியாவைச் சேர்ந்தவரான இவர், பாகிஸ்தானின் விருந்தாளியாக உபசரிக்கப்படுகிறார்’ என்று குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ, ஜோதியின் பாகிஸ்தான் பயணங்களில் அவர் பெற்ற விஐபி வரவேற்பு மற்றும் அவரது சந்தேகத்திற்குரிய தொடர்புகளை வெளிப்படுத்தியது. அவரது ஆடம்பர வாழ்க்கை முறையும் அவரது வருமானத்திற்கு ஏற்ப இல்லை என்று காவல்துறை கூறிய நிலையில், தற்போது அவர் பாகிஸ்தானில் துப்பாக்கி ஏந்திய நபர்களுடன் சுற்றித் திரிந்தது மேலும் சந்தேகத்தை வலுப்படுத்தி உள்ளது. அவருக்கு தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும் விசாரிக்கப்பட்டு வருகிறது.

The post உளவு பார்த்த வழக்கில் கைதான நிலையில் துப்பாக்கி ஏந்திய 5 பாதுகாவலர்களுடன் பாகிஸ்தானை சுற்றிவந்த பெண் யூடியூபர்: ஸ்காட்லாந்து நபரின் வீடியோவால் பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: