விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வாக்குபதிவு நிறைவு

விழுப்புரம்: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடந்தது வருகிறது. காலையிலே மக்கள் வாக்குச்சாவடிகளுக்கு வந்து நீண்ட வரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்குகளை செலுத்தி வருகின்றனர். திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா தனது சொந்த ஊரான அன்னியூரிலும், பாமக வேட்பாளர் பனையபுரம் வாக்குச்சாவடியிலும் வாக்களித்தனர்.

வாக்குப்பதிவுக்கு முன்பாக வாக்குப்பதிவு இயந்திரங்களின் செயல்பாட்டை உறுதி செய்திட வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் அதிகாலை 5.30 மணியில் இருந்து 6.30 வரை மாதிரி வாக்குப்பதிவு நடந்தது. இதை தொடர்ந்து மக்கள் வாக்களிக்க துவங்கினர். தொகுதிக்கு உட்பட்ட 276 வாக்குச்சாவடி மையங்களிலும் காலையிலே வந்து நீண்ட வரிசையில் நின்று மக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.

திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா தனது சொந்த கிராமமான அன்னியூரில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வாக்கு சாவடியில் தனது மனைவி மற்றும் குடும்பத்தினருடன் வந்து வாக்கு செலுத்திவிட்டு சென்றார். பாமக வேட்பாளர் சி. அன்புமணி பனையபுரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வாக்களித்தார். காணை ஒன்றியத்தில் காணை தொடக்கப்பள்ளி வாக்குசாவடி, மாம்பழப்பட்டு, கருங்காலிப்பட்டுஆகிய 3 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கோளாறு காரணமாக 30 நிமிடங்கள் வாக்குப்பதிவு தாமதமானது.

அதேபோல் ஒட்டன்காடுவெட்டி, கல்பட்டு வாக்குச்சாவடிகளில் ஒரு மணி நேரம் வாக்குப்பதிவு தாமதமானது. விக்கிரவாண்டி வட்டத்தில் பொன்னங்குப்பத்தில் இயந்திர கோளாறு காரணமாக 30 நிமிடம் வாக்குப்பதிவு தாமதமாக துவங்கியது. விக்கிரவாண்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் வாக்களிக்கும் இடத்தில் குளவி கூடு இருந்ததால் 15 நிமிடங்கள் வாக்குப்பதிவு தாமதமானது. பின்னர் தீயணைப்புத் துறையினர் வந்து குளவி கூடை அழித்தனர். இதன் பின் அங்கு வாக்குப்பதிவு நடந்தது. மற்ற வாக்குச்சாவடிகளில் தேர்தல் அமைதியாக நடந்து வருகிறது.

மாலை 5 மணி நிலவரப்படி ஆண்கள் 89,045 பெண்கள் 95,207 என மொத்தம் 1,84,255 பேர் வாக்களித்துள்ளனர். வாக்கு சதவீதம் 77.3 ஆகும். அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வெப் கேமரா பொருத்தப்பட்டு அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். வாக்குச்சாவடி அமைந்துள்ள பள்ளி வளாகங்களின் வெளிப்புறங்களில் 99 இடங்களில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம், விக்கிரவாண்டி தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்திலிருந்து கண்காணித்து வருகின்றனர். வாக்குச்சாவடி மையங்களில் வாக்குசாவடி தலைமை அலுவலர், வாக்குச்சாவடி அலுவலர் உள்ளிட்ட பணிகளுக்கு 1,355 பேர் பணியில் ஈடுபட்டுள்ளனர். இடைத்தேர்தல் பாதுகாப்புக்கு 216 துணை ராணுவம் மற்றும் 2,800 போலீசார் நியமிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

The post விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வாக்குபதிவு நிறைவு appeared first on Dinakaran.

Related Stories: