மணிப்பூர் மாநிலத்தில் கடந்த ஆண்டு மே மாதம் முதல் குகி-மெய்தி இன குழுக்களுக்கு இடையே மோதல் கலவரமாக தொடர்கிறது. தொடர்ந்து துப்பாக்கி சூடு, தீவைப்பு போன்ற வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இந்த பரபரப்பான சூழலுக்கு இடையே சமீபத்தில் நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவும் நடத்தி முடிக்கப்பட்டது. இருந்தபோதிலும் வன்முறை சம்பவங்கள் முடிவுக்கு வராமல் அவ்வப்போது தொடர்ந்த வண்ணம் உள்ளன.
இந்த நிலையில் நேற்று மெய்தி இனமக்கள் அதிகமாக வசிக்கும் பகுதியான பிஷ்ணுபூர் மாவட்டத்தில் குகி கிளர்ச்சியாளர்கள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். பிஷ்ணுபூர் மாவட்டத்தின் மொய்ரெங் பகுதியில் உள்ள முன்னாள் முதலமைச்சர் மைரெம்பாம் கொய்ரெங் வீட்டு வளாகத்தில் நேற்று மதியம் ராக்கெட் லாஞ்சர் மூலம் தக்குதல் நடத்தப்பட்டது. இதில் அங்கு பூஜை செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மேலும் 5 பேர் இந்த வெடிகுண்டு தாக்குதலில் படுகாயம் அடைந்தனர். படுகாயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ராக்கெட் குண்டு விழுந்த இடத்திற்கு 2 கிலோமீட்டர் தூரத்தில் இந்திய ராணுவ தலைமையகம் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
The post மணிப்பூர் முன்னாள் முதல்வர் வீட்டில் ராக்கெட் லாஞ்சர் மூலம் தாக்குதல்: ஒருவர் பலி, 5 பேர் படுகாயம் appeared first on Dinakaran.