37 வயதான இங்கிலாந்து அணி வீரர் மொயீன் அலி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து இருக்கிறார். இவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலும் நீண்ட காலமாக இடம் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. கடந்த 2023 ஆம் ஆண்டு ஆஷஸ் டெஸ்ட் தொடருக்குப் பின் டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வை அறிவித்திருந்தார். அதன் பின் இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் அழைப்பை ஏற்று இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் அவர் விளையாடினார்.
அடுத்து நடைபெற உள்ள ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் தனக்கு இடம் கிடைக்கும் என எதிர்பார்த்தார். ஆனால், மொயீன் அலி அந்த தொடருக்கு தேர்வு செய்யப்படவில்லை. இதை அடுத்து சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்திருக்கிறார்.
சுழற் பந்து வீச்சு ஆல் ரவுண்டனான மொயீன் அலி இங்கிலாந்து அணிக்காக 68 டெஸ்ட் போட்டிகளிலும், 138 ஒரு நாள் போட்டிகளிலும், 92 டி20 போட்டிகளிலும் விளையாடி இருக்கிறார். பேட்டிங்கில் சராசரியாகவே செயல்பட்ட மொயீன் அலி பந்து வீச்சில் இங்கிலாந்து அணிக்கு பலமுறை கை கொடுத்து இருக்கிறார்.
68 டெஸ்ட் போட்டிகளில் 24 விக்கெட்கள் வீழ்த்தி இருக்கிறார். 138 ஒரு நாள் போட்டிகளில் 116 விக்கெட்களை வீழ்த்தி இருக்கிறார். 92 டி20 போட்டிகளில் 51 விக்கெட்களை வீழ்த்தி இருக்கிறார். தற்போது உலகின் பல்வேறு டி20 தொடர்களில் விளையாடி வருகிறார். தனது ஓய்வு முடிவு குறித்து பேசிய மொயீன் அலி, “நான் இங்கிலாந்து அணிக்காக மீண்டும் விளையாட முயற்சி செய்யலாம். ஆனால், அதை நான் செய்ய மாட்டேன் என்பதுதான் நிதர்சனமான உண்மை. நான் ஓய்வு பெற்றாலும், நான் நன்றாக ஆடவில்லை என்பதால் ஓய்வு பெறுவதாக நினைக்கவில்லை. நான் எப்போதும் விளையாடுவதற்கு தயாராகவே இருக்கிறேன்.” என்றார்.
“ஆனால், இங்கிலாந்து அணி அடுத்த சுற்றுக்கு தன்னை தயார் செய்ய வேண்டும் என்பதை உணர்ந்து நான் இந்த முடிவை எடுக்கிறேன். எனக்கு நானே உண்மையாக இருக்க வேண்டும் என நினைக்கிறேன். அடுத்த தலைமுறை வீரர்களுக்கான நேரம் இது. இங்கிலாந்து அணி நிர்வாகமும் அதை எனக்கு விளக்கி இருந்தார்கள். எனவே, இதுதான் சரியான நேரம் என நினைத்தேன். அதனால், எனது பங்கை அளிக்கும் வகையில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறேன்.” என்று மொயீன் அலி கூறி இருக்கிறார்.
The post சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார் இங்கிலாந்தின் மொயின் அலி appeared first on Dinakaran.