மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கோடை மழையால் நிரம்பிய குளம், குட்டைகள்

 

ராமநாதபுரம் மே 18: ராமநாதபுரம் மாவட்டத்தில் பெய்த கோடை மழைக்கு 20 சதவீதம் குளம், குட்டைகளில் மழை நீர் தேங்கியுள்ளது. இதனால் பருத்தி, பனைமரம் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கோடை உழவு பணிகளும் தீவிரமடைந்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் பருவ மழை காலத்தில் மானவாரி விவசாயம் செய்யப்படுகிறது. முதுகுளத்தூர், கடலாடி, கமுதி, திருவாடனை, ஆர்.எஸ்.மங்கலம், ராமநாதபுரம், மண்டபம், திருப்புல்லாணி, நயினார்கோயில், பரமக்குடி உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் சுமார் 3 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நெல் முக்கிய பயிராகவும்,மிளகாய் உள்ளிட்ட தோட்டப்பயிர்கள் சுமார் 50 ஆயிரம் ஏக்கரிலும் பயிரிடப்படுகிறது.இதனை போன்று மழைக்காலம் மற்றும் கோடைகாலத்தில் பரவலான பகுதிகளில் சுமார் 23 ஆயிரம் ஏக்கரில் பருத்தி விவசாயம் செய்யப்படுகிறது.போர்வெல் தண்ணீர் கிடைப்பதால் மாவட்டத்தில் முதுகுளத்தூர் பகுதியில் சுமார் 7 ஆயிரம் ஏக்கருக்கு மேல் பருத்தி பயிரிடப்படுகிறது.

இந்தநிலையில் இந்தாண்டு பருவமழை பொய்த்து போனது. இதனால் சுமார் 2.50 லட்சம் ஏக்கர் நெற்பயிர், சுமார் 25 ஆயிரம் ஏக்கர் மிளகாய் பயிர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் கோடையில் பருத்தி விவசாயம் செய்கின்ற விவசாயிகள் அச்சத்துடன் பருத்தி விதைத்தனர். இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாத கடைசியில் கோடை மழை பெய்தது.
இதனால் கடலாடி, கமுதி, முதுகுளத்தூர், சிக்கல், இதம்பாடல், உத்தரகோசமங்கை, திருப்புல்லாணி, ராமநாதபுரம், நயினார்கோயில் உள்ளிட்ட மாவட்டத்தின் பரவலான பகுதி கிராமங்களில் உள்ள சிறு குளங்கள், குட்டைகள் என 20 சதவீத நீர்நிலைகளில் மழைநீர் தேங்கியுள்ளது. சில இடங்களில் முழுமையாகவும் நிறைந்து காணப்படுகிறது. இதனால் பருத்தி விதைக்காமல் இருந்த பகுதிகளில் உழவார பணிகளை செய்து பருத்தி விதைத்தும், பருத்தி விதைக்கப்பட்டு நன்றாக வளர்ந்து வந்த பகுதிகளில் உரம் இடுதல் உள்ளிட்ட பராமரிப்பு பணிகளை விவசாயிகள் விறுவிறுப்பாக செய்து வருகின்றனர்.

The post மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கோடை மழையால் நிரம்பிய குளம், குட்டைகள் appeared first on Dinakaran.

Related Stories: