வண்டலூர் உயிரியல் பூங்காவில் நுழைவுக்கட்டணம் அதிகரிப்பு; கட்டண உயர்வை திரும்ப பெற சுற்றுலாப் பயணிகள் வலியுறுத்தல்..!!

சென்னை: வண்டலூர் உயிரியல் பூங்காவில் வரும் சனிக்கிழமை முதல் புதிய கட்டணம் அமல்படுத்தப்படவுள்ளது. ஆனால் கட்டண உயர்வு அதிகமாக உள்ளதாகவும் இதனை குறைக்க வேண்டும் என்றும் பார்வையாளர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ஆசியாவின் மிகப்பெரிய உயிரியல் பூங்காவாக திகழும் வண்டலூரில் விலங்குகள், பறவைகள், ஊர்வன என 177 இனங்களை சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உயிரினங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. சென்னைக்கு அருகே சுமார் 1500 ஏக்கர் பரப்பளவில் மலை, மரங்கள் சூழ்ந்த வனப்பகுதியில் இயற்கை வளங்களுடன் விளங்கும் இந்த உயிரியல் பூங்காவில் வார விடுமுறை தினங்கள், பண்டிகை காலங்கள், பள்ளி விடுமுறை நேரங்களில் கூட்டம் அலைமோதுவது வழக்கம்.

இந்நிலையில் அங்கு நுழைவு கட்டணத்தை மாற்றி அமைத்து நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி தற்போது மாற்று திறனாளிகள், 5 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்களுக்கான அனுமதி இலவசம் என்பது அப்படியே தொடர்கிறது. முன்பு செல்போன் கட்டணமாக 25 ரூபாயுடன் மொத்தம் 115 ரூபாய் நுழைவு கட்டணம் வசூலிக்கப்பட்ட நிலையில் தற்போது 200 ரூபாய் என மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. செல்வதற்கான கட்டணம் 100 ரூபாயில் இருந்து 150 ரூபாயாகவும், சிங்கம் உலாவும் இடத்திற்கு செல்ல 50 ரூபாயில் இருந்து 100 ரூபாயாகவும் கட்டணம் உயர்த்தபட்டுள்ளது. மேலும் வாகனம் நிறுத்தும் இடத்திற்கு நாள் வாடகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த மாற்றப்பட்ட புதிய கட்டணம் வரும் சனிக்கிழமை முதல் அமலாகவுள்ளது. பூங்கா மேம்பாட்டிற்காகவும், விலங்குகளுக்கான உணவு உள்ளிட்ட பராமரிப்பு செலவு போன்ற காரணங்களால் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக வண்டலூர் பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதேசமயம் கட்டணம் இரு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளதற்கு பார்வையாளர்கள் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர். குறைந்த பட்ஜெட்டில் குடும்பத்துடன் பொழுதுபோக்க சென்னைக்கு அருகே உள்ள சிறந்த இடமாக வண்டலூர் திகழ்வதாக கூறும் மக்கள், தற்போது உயர்த்தப்பட்டுள்ள நுழைவு கட்டணத்தை திரும்ப பெற வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர்.

The post வண்டலூர் உயிரியல் பூங்காவில் நுழைவுக்கட்டணம் அதிகரிப்பு; கட்டண உயர்வை திரும்ப பெற சுற்றுலாப் பயணிகள் வலியுறுத்தல்..!! appeared first on Dinakaran.

Related Stories: