கிடப்பில் போடப்பட்ட சிவகங்கை புறவழிச்சாலை பணி தீவிரம்: பொதுமக்கள் மகிழ்ச்சி

சிவகங்கை: கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக கிடப்பில் போடப்பட்ட சிவகங்கை புறவழிச்சாலை திட்ட பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மாவட்ட தலைநகரான சிவகங்கை வழியே மதுரை, தொண்டி தேசிய நெடுஞ்சாலை, திருப்புத்தூர் சாலை, மானாமதுரை சாலை என முக்கிய சாலைகள் செல்கின்றன. போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் புறவழிச்சாலைகள் அமைக்க திட்டமிடப்பட்டன. தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் திருப்புத்தூர் சாலை மற்றும் மானாமதுரை சாலையை இணைக்கும் வகையில் பெருமாள்பட்டியில் இருந்து சாமியார்பட்டி வரை புறவழிச்சாலை அமைக்கப்பட்டது. மற்றொரு புறவழிச்சாலையான திருப்புத்தூர் சாலையில் காஞ்சிரங்காலில் இருந்து மானாமதுரை சாலையில் உள்ள வாணியங்குடி வரை சாலை அமைக்கும் பணி மட்டும் தொடங்கப்படவில்லை. இச்சாலை மாநில நெடுஞ்சாலைத்துறையின் கட்டுப்பாட்டில் வருவதாகும்.

இந்த சாலை காஞ்சிரங்காலில் இருந்து சூரக்குளம், பையூர், ஆயுதப்படை குடியிருப்பு வழியாக வாணியங்குடி வந்தடையும். சுமார் 10.6 கி.மீ. நீளமுள்ள இச்சாலை சூரக்குளம், கீழக்கண்டனி ஆகிய இரண்டு இடங்களில் ரயில்வே தண்டவாளங்களை கடந்து செல்கிறது. இச்சாலை பணி கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தொடங்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் இச்சாலைப்பணியை தொடங்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தப்பட்டது. இதையடுத்து காஞ்சிரங்கல் ஊராட்சி பகுதியில் இருந்து 10.6 கி.மீ. தூரத்திற்கு புறவழிச்சாலை அமைக்க ரூ.109.51 கோடி மதிப்பீட்டில் ஒப்புதல் பெறப்பட்டு, முதற்கட்டமாக, மொத்தம் 7 கி.மீ தொலைவிற்கு ரூ.77.16 கோடியில் சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

காஞ்சிரங்காலில் இருந்து தொண்டி சாலை வரை பணி நடைபெறும் நிலப்பகுதிகள் சுத்தம் செய்யப்பட்டு, சமப்படுத்தும் பணிகள் முடிவடைந்தன. இதையடுத்து, பாலம் கட்டுமான பணி, சாலைக்கான அடித்தளம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. சாலை அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருவதால் இப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதுகுறித்து இப்பகுதி மக்கள் கூறுகையில், ‘நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலை பணிகள் தொடங்கப்பட்டு விரைவாக நடந்து வருகிறது. இதே வேகத்தில் ரயில்வே மேம்பால பணிகளையும் ஒன்றிய அரசு முடிக்க வேண்டும். அதை இழுத்தடித்தால் சாலைப்பணிகளில் தொய்வு ஏற்படும். எனவே மேம்பால பணியையும் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

The post கிடப்பில் போடப்பட்ட சிவகங்கை புறவழிச்சாலை பணி தீவிரம்: பொதுமக்கள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: